சென்னையில் அதிக வெப்பம்: வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்


சென்னை: தமிழக அளவில் கடந்த 4 நாட்களாகசென்னையில் கடும் வெயில் பதிவாகிவருகிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது: ரீமல் புயல் உருவானதால் தமிழகத்துக்கு இயல்பாக காற்று வீசும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது ஆந்திர பகுதியிலிருந்து வெப்பமான தரைக்காற்று தமிழகம் நோக்கி வீசுகிறது.

இந்த காற்று வலுவாக இருப்பதால், ஈரப்பதம் மிகுந்த கடல் காற்று தமிழகத்தினுள் நுழைய முடியவில்லை. அதன் காரணமாக காற்றில் ஈரப்பதம் குறைவாக உள்ளது. மழை மேகங்களும் உருவாகவில்லை.

மேற்கூறிய காரணங்களால் சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை போன்றமாவட்டங்களில் வெப்பம் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் வெப்பம் மாநில அளவில் உச்ச அளவாகப் பதிவாகிவருகிறது. அடுத்த சில தினங்களுக்கு சென்னையில் வெப்பம் அதிகமாகவே இருக்கும். கடந்த 3 நாட்களை விட அதிகமாகக் கூட பதிவாக வாய்ப்புள்ளது.

சென்னையில் கடந்த 2003 மே 31-ல் 113 டிகிரி, 2014-ம் ஆண்டு மே 24-ல் 109டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி இருப்பதே உச்ச அளவாக உள்ளது. தென்தமிழகம், உள் மாவட்டங்களில் ஈரப்பதம்மிகுந்து மேற்கு திசைக் காற்று வீசுவதால் அப்பகுதிகளில் வெப்பம் குறைவாகப் பதிவாகி வருகிறது என்றார்.

x