கொசு ஒழிப்பு பணியில் 27 ஆயிரம் ஊழியர்கள்: பொது சுகாதாரத் துறை தகவல்


சென்னை: தென்மேற்கு பருவமழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் இருக்கும். மேலும், வெப்பச் சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்கக் கூடும். எனவே,மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து கொசு ஒழிப்பு, டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காய்ச்சல் கண்டறிதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

குறிப்பாக, டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் பணிகளில் 27 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான உயிர்காக்கும் மருந்துகள், பரிசோதனைக் கருவிகள், ரத்தம் ஆகியவற்றை போதிய அளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள், ஆரம்பசுகாதார நிலையங்களில் தடையில்லா மின் வசதிகள் இருப்பதைஉறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.

x