குருவாயூர் போகணும்!- எஸ்.லஷ்மிகாந்தன்


சுப்ரஜாவின் மனசு அலைபாய்ந்து கொண்டிருந்தது. இந்த மாசமாவது குருவாயூர் சென்று வேண்டுதல் செய்ய முடியுமா என்று யோசனையாக இருந்தது.

இதுவரை எத்தனையோ தடவை தட்டிப் போயிருக்கிறது. இம்முறை அப்படி ஆகக்கூடாது. குருவாயூரப்பா, அதற்காகத் தனியாக இன்னொரு துலாபாரத்திற்கு வேண்டிக் கொள்கிறேன்.

எத்தனை வருஷத்துக் கனவு அது. கல்யாணம் ஆகி ஆறாண்டுகளாய் நினைத்து நினைத்துப் பல சமயங்களில் போக இயலாமல் போய்விட்டது. யாரோ ஒரு வேண்டியவரின் மரணம், எல்லா நேரத்திலும் இருக்கும் கணவனின் ஆபீஸ் வேலைகள், மழைக்காலம், உடல் நலமின்மை, இப்படி எத்தனையோ... எல்லாம் கூடி வந்தால் போக இயலாதபடி பெண்களுக்கேயான இயற்கைத் தடைகள்!

இந்த முறை போயே ஆக வேண்டும். குருவாயூரில், உருளியில் நிரப்பி வைத்திருக்கும் குண்டுமணிகளை அணைத்துக்கொண்டு குழந்தை வரம் வேண்டி பிரார்த்திக்க வேண்டும். அப்படிச் செய்தால் நிச்சயம் பலிக்கும். சுப்ரஜா செல்போனை எடுத்தாள். கணவன் சரவணன் எண்ணுக்கு விரல்களைத் தேய்த்தாள்.

x