சென்னை: நார்வே நாட்டில் நடைபெற்று வரும் செஸ் போட்டி தொடரில் முதல்முறையாக உலகின் நம்பர்ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி தமிழகத்தை சேர்ந்தகிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவும், மகளிர் நார்வே செஸ் அறிமுகப் போட்டியில் ஹம்பி கோனேருவை வீழ்த்தி வைஷாலியும் புதிய சாதனை படைத்துள்ளனர்.
இவர்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
நார்வே செஸ் போட்டி தொடரில் புதிய தலைவர்களாக உருவெடுத்துள்ள தமிழகத்தின் கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தாவுக்கும், வைஷாலிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நார்வே செஸ் தொடரில் முதல் முறையாக விளையாடும் பிரக்ஞானந்தா, கிளாசிக்கல் சுற்றில் முதல் முறையாக உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இருப்பதுமறக்க முடியாத சாதனையாகும்.
சகோதர சகோதரி: அதேபோல், மகளிருக்கான நார்வே செஸ் போட்டி தொடரின்ஆரம்பப் போட்டியில் முதன்முறையாக களமிறங்கிய பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி, கிளாசிக்கல் சுற்றில் இந்தியாவின் ஹம்பி கோனேருவை தோற்கடித்திருப்பதும் அசாதாரண சாதனையாகும். அந்த வகையில் சகோதரர்கள் பிரக்ஞானந்தாவும், வைஷாலியும் தொடர்ந்து வெற்றிப்பெற்று நார்வேயில் சாம்பியன் பட்டம் வெல்ல வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.