தீபாவளி என்றால் அது ஒரு இந்துப் பண்டிகை என்பதான எண்ணம் பொதுவாக உள்ளது. ஆனால், தீப ஒளித் திருநாளான தீபாவளி, முஸ்லிம் பேரரசர்களின் அரசவையிலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டுள்ளது. ‘ஜெஷன்-எ-சிராகோன்’ (மின்னும் விளக்குகள்) எனும் பெயரில் அழைக்கப்பட்ட தீபாவளி மத நல்லிணக்கத்துக்குச் சிறந்த சான்றாகவும் விளங்குகிறது.
இந்தியாவை ஆட்சி செய்த முஸ்லிம் பேரரசர்கள் சுயசரிதை எழுதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். தங்கள் வாழ்க்கை முறையின் அடிப்படையில் அவர்கள் வரைந்த ஓவியங்களும் வரலாற்று ஆதாரங்களாகத் திகழ்கின்றன. இவர்கள் ஆட்சியைப் பற்றி வெளிநாட்டுப் பயணிகள் எழுதிய பயணக் கட்டுரைகளும் கிடைத்துள்ளன. இவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட முஸ்லிம் மன்னர்களின் வரலாற்றில், தீபாவளி உட்பட பல இந்துப் பண்டிகைகள் கொண்டாடப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.
துக்ளக்கா, அக்பரா?
முஸ்லிம் பேரரசர்களில் முதன்முறையாக யாருடைய காலத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டது என்பது உறுதியாகத் தெரியவில்லை. அது துக்ளக் வம்சத்தில் தொடங்கியது என்றும் பேரரசர் அக்பர் காலத்தில் ஆரம்பித்தது என்றும் இரண்டு வகையான கருத்துகள் உள்ளன. ஒரு கூற்றுப்படி, கி.பி.1324 முதல் 1351-ம் ஆண்டுவரை டெல்லியை ஆண்ட முகமது பின் துக்ளக், அவரது அந்தப்புரத்தில் இருந்த இந்து மனைவிகள், அடிமைகள், விலை மாதர்களுக்காகத் தீபாவளி கொண்டாடத் தொடங்கி உள்ளதாகத் தெரிகிறது. துக்ளக்கின் அந்தப்புரத்தில் திருவிளக்குகள் ஏற்றி, சிறப்பான உணவு வகைகளுடன் தீபாவளி கொண்டாடப்பட்டுள்ளது. மெல்ல மெல்ல இதைத் தம் அரசவைக் கொண்டாட்டமாகவும் துக்ளக் மாற்றினார் என்கிறது அந்தக் கூற்று. தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக முகலாயப் பேரரசுகளில் இந்துப் பண்டிகைகள் கொண்டாடப்ப ட்டுள்ளன.