காரைக்குடி: அதிமுக அணையப்போகும் விளக்கு, ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு அந்த கட்சியே இருக்காது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கன்னியாகுமரியில் 1892 டிச. 24 முதல் 26-ம் தேதி வரை சுவாமிவிவேகானந்தர் கடும் தவம் புரிந்தார். அந்த தவம் மூலம் இந்தியாவின் தன்மை, வளர்ச்சியை அவர் உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த காலத்தில் பெரிய போராட்டத்துக்குப் பின்னரே விவேகானந்தர் பாறையில் மண்டபம் கட்டப்பட்டது.
தமிழகம் பெரும் பங்கு வகிக்கும்: விவேகானந்தர் மண்டபத்தை தனியார் அமைப்பு நிர்வகித்து வருகிறது. தற்போது அந்த தனியார் அமைப்பு அழைப்பின்பேரிலேயே பிரதமர் வந்துள்ளார். அதனால்தான் கட்சியினர் யாரும் அங்கு செல்லவில்லை. பிரதமர் மோடி,அமித் ஷா ஆகிய இரு தலைவர்களும் தேர்தல் தொடக்கத்திலும், முடிவிலும் தமிழகத்துக்கு வந்துள்ளனர். அதனால் பாஜக ஆட்சிக்கு வந்தால், தமிழகம் பெரும் பங்கு வகிக்கும்.
மக்கள் மன்றத்தில் இந்துத்துவா குறித்து விவாதம் நடப்பது மகிழ்ச்சிதான். இதன்மூலம் இந்துத்துவா குறித்த உண்மையான விளக்கம் வெளியே வரட்டும். இந்து யாருக்கும் எதிரி கிடையாது. இஸ்லாம், கிறிஸ்தவத்துக்கு எதிரி என்று கூறுபவர்கள், இந்துத்துவா வாதியே கிடையாது.
ஜூன் 4-ம் தேதிக்குப் பின்னர் அதிமுகவே இருக்காது. அப்போதுஅந்தக் கட்சி எங்கே இருக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம். விளக்கு அணையும்போது பிரகாசமாக எரியும் என்பார்கள். அதனால்தான் அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.