மேரி பிஸ்கட்டும் மங்களம் ஆச்சியும்! - பிரவீன்குமார்


எழுபது வயது கிழவர் என் முன்னால் கேவிகேவி அழுவது எனக்கே சற்று சங்கடமாகத்தான் இருந்தது. கைகளைப் பிடித்துக்கொண்டு விசும்ப ஆரம்பித்தார். இருந்தாலும் தற்சமயம் அவருக்கு அது தேவையாக இருந்ததால் அமைதியாக இருந்தேன். அந்த அறையின் மையத்தில் ஐஸ் பெட்டிக்குள் கிடத்தப்பட்டிருந்த மங்களம் ஆச்சி, இறந்துவிட்டாள் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், இறந்துவிட்டிருந்தாள். வழக்கத்தைவிட முகம் தெளிவாகவே இருந்தது. சாவுக் களை என்று சொல்வார்களே அது இதுதான் பார்த்துக்கொள் என்ற தொனியில் இருந்தது.  ‘Forty years my son; Forty years of togetherness' என்றவரின் நா தழுதழுத்தது. அவரை மெதுவாக அருகில் இருந்த சேரில் அமரவைத்துவிட்டு வெளியே வந்தேன்.

சாவு வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாம் வகுத்து வைத்திருப்பதற்கு சற்றும் குறைவில்லாமல் அப்படியே இருந்தது அவ்வீடு. வாசலில் போடப்பட்டிருந்த விஜி டிரேடர்ஸ் வாடகைச் சேர்களில் வரிசையாக அமர்ந்திருந்தவர்கள், அன்றைய தினசரியைக் கையில் வைத்தபடி ஏதோ முணுமுணுவென்று பேசிக்கொண்டிருந்தார்கள். அரசியலாக இருக்குமென்று நினைக்கிறேன்.

என் அருகில், தரையில் பாய்விரித்து உட்கார்ந்திருந்த பெண்கள் குழாம், புடவைத் தலைப்பைக்கொண்டு வாயைப் பொத்தியவாறு பேசிக்கொண்டார்கள்.
“மவராசி, சுமங்கலியா போய் சேர்ந்திட்டா; இதுக்கெல்லாம் பெரிய புண்ணியம் செஞ்சுருக்கணும்!”

நான் சிரித்துக்கொண்டேன். ஆமாம், இறப்பு என்பது எத்தனை பெரிய விஷயம்! அவ்வளவு எளிதில் கிடைக்கக்கூடியதா? இதுநாள்வரை வாழ்ந்த வாழ்வின் வெகுமதிதானே அது. நாம் செய்த தீவினைகளுக்கும் நன்மைகளுக்கும் இந்த இறப்புக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கிறதோ என்று தோன்றியது. நிச்சயம் இருக்கிறது.
“நேத்துக்கூட நல்லாதான் இருந்தா. அதுக்குள்ள இப்படி ஆகிப்போச்சு” என்று ஆச்சியின் சம வயதுக்காரப் பெண்மணி ஒருவர்  உச் கொட்டினார்.
மரணம் என்ன அமேசான் டோர் டெலிவரியா? இப்போது வருகிறேன், அப்போது வருகிறேன், இதோ வந்துவிட்டேன் என்று சொல்லிவிட்டு வருவதற்கு? அது வரமல்லவா... அனைவருக்கும், நினைத்தவுடன் கிடைத்துவிடுமா என்ன? தவத்தின் பயன் அது, அதுவொரு நீண்ட பயணத்தின் முடிவு, வேறொரு மாயப்பயணத்தின் தொடக்கம்.
தெருமுக்கில் இருக்கும் ஜேம்ஸ் அண்ணன் கடையில் அமர்ந்து வழக்கம்போல பேசிக்கொண்டிருக்கும்போதுதான் அவரைப் பார்த்தேன். 
“மேரி பிஸ்கட் ஒரு பாக்கெட் கொடுப்பா" என்று வாங்கிச் சென்றார். ஒருநாள் விட்டு ஒருநாள் இந்தச் செயல் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்க, “யார்ண்ணே இவரு? தினமும் வந்து பிஸ்கட் வாங்கிட்டுப் போறாரு?” என்று கேட்டேன்.

x