சென்னை: கருப்பை புற்றுநோய்க்கு இந்தியாவிலேயே முதல்முறையாக ரோபோட்டிக் அறுவை சிகிச்சையை அப்போலோ புரோட்டான் கேன்சர் மையம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து புற்றுநோயியல் முதுநிலை மருத்துவர் பி.வெங்கட், பிரியா கபூர் கூறியதாவது: அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் கருப்பை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை முறையை மேம்படுத்துவதற்கு ரோபோட்டிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
குவஹாட்டி மற்றும் சென்னையை சேர்ந்த 2 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்றுநோயும், மற்றொரு பெண்ணுக்கு முற்றிய நிலையில் கருப்பை மற்றும் மார்பகப் புற்றுநோயும் இருந்தது. இவர்களுக்கான அறுவை சிகிச்சைக்கு ரோபோட்டிக் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தினோம். இவர்களுக்கு கருப்பையைத் தாண்டி ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளில் புற்றுநோய் பரவியிருந்தது.
நோயாளிக்கு கருப்பையில் புற்றுநோய் இருந்தால் வயிற்றைக் கிழித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் 4 முதல் 5 சிறிய துளைகளையிட்டால் போதும்.
இவ்வாறு துளையிட்டு அறுவை சிகிச்சை செய்தாலும் நுட்பமாகவும், துல்லியமாகவும் ஆரோக்கியமான திசுக்களை அகற்றாமல் தக்கவைத்து அதே வேளையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திசுக்களையும், செல்களையும் அகற்றுவதற்கு இந்த ரோபோட்டிக் தொழில்நுட்பம் உதவுகிறது.
அதுமட்டுமின்றி திறந்த நிலையில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்தால் அதிக ரத்தம் வீணாகும். இப்போது ரத்தம் வீணாவதும் குறைகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் 10 நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டும். ஆனால், ரோபோட்டிக் சிகிச்சை 3 நாட்களில் நோயாளியை வீட்டுக்கு அனுப்புவதற்கான சூழலை உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.