கூட்டுக் குடும்பம் - டி.சீனிவாசன்


வாசற்படி அருகே ஒரு ஈஸிசேரில் கண்மூடி, காலை வெயிலின் அழகை உள்வாங்கி ரசித்துக்கொண்டிருந்தார் கனகசபை.
“ஐயா.”
குரல் கேட்டு விழித்தார். பார்வையே, ‘என்ன?’ என்று கேட்டது. கையில் ஒரு ஃபைலுடன் நின்ற நபர், தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
“என் பேரு குமார். புது ரேஷன் கார்டு கொடுக்க ஒரு கிராஸ் வெரிஃபிகேஷன் பண்ணணும். நான் ஒரு பார்ட் டைம் வொர்க்கர்.”
“ஓ! வாங்க” என்றபடி கனகசபை வீட்டினுள் இருக்கும் தன் மனைவிக்குக் குரல் கொடுத்தார். “லட்சுமி, வெளியே வாயேன். ரேஷன் கார்டு விஷயமா விவரம் சொல்லணும்.”
பிறகு குமாரிடம் திரும்பி, “உட்காருங்க” என்று அருகில் இருந்த ஒரு நாற்காலியைக் காட்டினார். உட்கார்ந்த குமார் ஃபைலைத் திறந்து, சில காகி
தங்களைத் தள்ளி, “இது டு பார் செவன்தான?” என்று கேட்டான்.
“ஆமாம்”
“நீங்க கனகசபை இல்ல?” குமார் கேட்கும்போதே லட்சுமி வெளியே வந்தார். கையில் ரேஷன் கார்டு.
“ஆமாம். நான் கனகசபை, இவ லட்சுமி, அப்பறம்...”
“சரவணன், கணேசன், வித்யா... இவங்க, அப்பறம் சுவாதின்னு ஒரு சின்னப் பொண்ணு” குமார் படித்துக்கொண்டே போக, லட்சுமி சத்தமாக, “கணேசன், சரவணன், வித்யா கொஞ்சம் வாங்களேன்” என்று கூப்பிட்டார்.
குமார் தன் வேலை எளிதாக முடிந்ததாக எண்ணி, “பரவால்லீங்க, எல்லாரும் இருக்கீங்க” என்று தனது படிவத்தில் டிக் அடிக்க ஆரம்பித்தார். ஒரு நிமிட நேரத்துக்குள், மற்ற மூவரும் ஆஜரானார்கள்.
“நீங்க, சர்க்கரை மட்டும் போதும்கிற கார்டுதான?”
“ஆமாம்” சரவணன் சொன்னார். குமார் தொடர்ந்து கேட்டான்,
“கனகசபை, இப்ப உங்க வயசு என்னங்க?”
“எழுபத்தி ஏழு”
“லட்சுமி அம்மா?”
“அறுபத்தி நாலு.”
“சரி, கணேசன் இங்க யாரு?”
“நான்தான், மூத்தவன்” கணேசன் சொல்ல,
“வயசு?”
“அம்பத்தி மூணு.”
“வித்யா இவங்களா? உங்க மனைவியா?” குமார் கேட்க,
“இல்ல, சிஸ்டர்...”
“ஓ, சாரி! உங்க வயசும்மா?”
“நாற்பத்தி எட்டு.”
“சரிங்க, சரவணன் நீங்களா?”
“ஆமாம், வயசு அம்பது” சரவணன் சொன்னார்.
“குட்டிப் பொண்ணு சுவாதி?”
“அவ ஸ்கூலுக்குப் போயிருக்கா.”
“சரிங்க” என்ற குமார், ஏதோ யோசித்துப் பிறகு கனகசபையிடம் தயங்கிக் கேட்டான்.
“தப்பா நினைக்காதீங்க. வித்யா உங்க பொண்ணுன்னா, உங்க மருமகங்க பேரு, அப்பறம் வித்யா கணவர் பேரு எங்க இருக்கு?”
கனகசபை சிரித்துவிட்டு, “சரவணா, கணேசா, நீங்களே சொல்லுங்கப்பா…” என்றார்.
குமார் அந்த இருவரையும் பார்த்தான். சரவணன் சொன்னார். “எங்கப்பா, அம்மாவுக்கு நாங்க ரெண்டு மகன்கள், ஒரே பொண்ணு. நாங்க யாருமே கல்யாணம் பண்ணிக்கல! பாவம் எங்கப்பாவும் எவ்வளவோ சொல்லிப்பாத்தாரு. நாங்க இதில உறுதியா இருந்திட்டோம்.”
குமார் வியப்பாகப் பார்த்தான், குடும்பத்தில் ஏதோ ஓரிருவர் திருமணமாகாமல் இருந்திருக்க வாய்ப்புண்டு, மூவரும் என்றால்! “சார், ரொம்ப ஆச்சரியமாவும் இருக்கு, இன்ட்ரஸ்டிங்காவும் இருக்கு! இந்த முடிவ உங்க சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க, யாரும் விமர்சனம் பண்ணலயா?”
“ஆமாம். மொதல்ல தப்புன்னாங்க. குடும்பத்துக்கே சாபம்ன்னு கூட சொன்னாங்க. பாவம்னாங்க. எல்லாருக்குமே போகப் போக அலுத்துப்போச்சு!”
“மன்னிக்கணும்! தனியா இருக்கறது உங்க விருப்பம். ஆனா என்ன காரணத்துக்காக இந்த முடிவ எடுத்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” குமார் கேட்டான்.
“தெரிஞ்சிக்கிட்டா தப்பில்லீங்க” கணேசன் இடையில் புகுந்து பேச ஆரம்பித்தார். “முதல் காரணம் எங்க அப்பா, அம்மா! இந்த வயசான காலத்துல அவங்க எந்தக் கஷ்டமும் இல்லாம நிம்மதியா இருக்காங்க! அவங்க பேச்சுக்கு பதில் சொல்ல, ஒருத்தருக்கு மூணு பேர் இருக்கோம். எங்க வாழ்க்கைய அவங்களுக்காகவே அர்ப்பணிக்க முடிவு செஞ்சோம். கொஞ்சம் ஓவராத் தெரியும், ஆனா எங்களுக்கு நியாயமாத்தான் தெரியுது!”
“சரிங்க, அப்ப உங்களுக்குன்னு தனித்தனிக் குடும்பம், வாரிசு தேவையில்லையா?”
“தேவைன்னு யார் சொன்னாங்க! சட்டமா இருக்கு! எல்லாரும் ஏதோ கட்டாயம்னு தேடிக்கிறோம், அவ்வளவுதான். ஆனா அதே நேரம் அந்த மாதிரி வாய்ப்பு அமைஞ்சிருந்தா, எங்கள பெத்தவங்களுக்கு இப்ப கெடைக்கிற நிம்மதி, சந்தோஷம் அப்ப கிடைச்சிருக்கும்னு சொல்ல முடியாது!”
குமார் யோசித்தான், “சரிதான், சொல்ல முடியாதுதான். அதுக்காக இப்படிப் பெத்தவங்க சேவையே குறிக்கோளா இருந்தா வாழ்க்கையில சுவராசியம் எப்படி இருக்கும்?”
இதற்கு வித்யா பதில் சொன்னார், “வாழ்க்கையோட சுவராசியம் புதுப்புது உறவுகள்ட்ட இல்லீங்க! அப்படிப் பாத்தா எல்லாரும் நாலைஞ்சு கொழந்தைங்களப் பெத்துக்கணும், மாமனார், மாமியார்ன்னு அந்தப் புதுப்புது உறவுகளையும் மனசார ஏத்துக்கிட்டு வாழணும். அது நடைமுறைக்கு சாத்தியமில்லையே!”
‘கரெக்ட்தான். கணவன், மனைவி, குழந்தைகள் தவிர மற்ற உறவுகள் திருமணத்துக்குப் பிறகு சற்று அந்நியப்பட்டுதான் போகின்றன.’
குமார் விடவில்லை.
“உங்களோட இந்த வம்சம் முடிஞ்சிடாது?”
வித்யாவும் விடவில்லை.
“ஆமாமாம்! தொடர்ந்து வந்தே தீர இது ராஜ பரம்பரையா? சாதாரண மனித வாழ்வுதான்! இந்த வாழ்க்கையிலேயே நமக்குள்ள கடமைகள சரிவர செஞ்சு, யார் மனசையும் புண்படுத்தாம, இந்த நூற்றாண்டுல உள்ள வசதிகள அனுபவிச்சு, உடம்பையும் மனசையும் சந்தோஷமா வெச்சுக்கிட்டாலே அதுவே நல்ல வாழ்வுதானே!”
“அப்ப வாழ்க்கைக்கு இதான் அர்த்தமா?”
“ஆமாம். வாழ்க்கைன்னா இருக்கறத வெச்சு தானும், தன்னைச் சுத்தி உள்ளவங்களும் சந்தோஷமா வாழ்றதுதானே! அத விட்டுட்டுக் கல்யாணம்னு தொடங்கி பரஸ்பரம் ஈகோ, சச்சரவு, பிள்ளைங்க, அதோட வளர்ச்சி, எதிர்காலப் பாதுகாப்பு, இப்படி ரிஸ்க்கான நிலையை ஏற்படுத்திக்கறதா வாழ்க்கை?” வித்யா கேட்டார்.
“ஐயா, இவங்க கருத்துல உங்களுக்கு உடன்பாடு உண்டா?”
கனகசபை லட்சுமியைப் பார்த்தார். இப்போது லட்சுமி பேசினார். “எங்களுக்கு எப்படி உடன்பாடு இருக்கும்? புள்ளைங்க, மருமகள், மருமகன், பேரன், பேத்திங்கன்னு வாழ்ந்தாதான சுகம்! ஆனா எங்க பேச்ச யாரும் கேட்கலியே? சரின்னு விட்டுட்டோம், வேற வழி? ஆனா அக்கம்பக்கத்துல உள்ளவங்க , தங்களோட குடும்பப் பிரச்சினைகள சொல்லும்போது, எங்க பாடு தேவலன்னு சமயத்துல தோணும்!”
லட்சுமி சொல்லும்போதே கணேசன் மீண்டும் பேசினார். “அவங்க பெரியவங்க, அப்படித்தான் பேசுவாங்க! மூணு பேருக்கும் ஏதோ ஒரு அதிர்ஷ்டத்துல எண்ணங்கள் ஒரே மாதிரி இருந்ததுதான் ஆச்சரியம்! யாரும் யாரையும் கம்பெல் பண்ணல, அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கைன்னு ஒரு குடும்பம் பரிபூரணமா முழு வாழ்க்கை வாழ்ந்து பார்க்கலாம்னு வந்த யோசனை நடைமுறைல சாத்தியம்னு நிரூபிச்சிட்டோம்! அதுக்குக் கடவுளுக்கு நன்றிங்க!”
உண்மைதான், புது உறவுகள் வரவர பழைய உறவுகள் கசந்துபோக வாய்ப்புண்டுதானே!
“இதுக்காக நீங்க எதையுமே இழக்கலயா?” குமார் கேட்டான்.
“ஒண்ண எல்லாரும் இழந்துட்டோம். அது தாம்பத்ய வாழ்க்கை. ஆனா அதுக்கு ஈடா ஏராளமாக் கிடைச்சிருக்கு! அதைக் குடும்ப வாழ்க்கை வாழறவங்க புரிஞ்சிக்க முடியாது!”
“உங்களுக்குள்ள மனஸ்தாபம், சண்டை, சச்சரவு வந்ததே இல்ல?” என்று குமார் ஆச்சரியப்பட,
“ஏன் வராம? ஆனா அடுத்த நிமிஷம் மறைஞ்சிடும். அதப் பெரிசாக்க இங்க யாரு இருக்கா?”
என்னவோ அந்த கூட்டுக் குடும்பம் நியாயமான ஒன்றுதான் என்று குமாரால் சொல்ல முடியவில்லை, அதே நேரம் தன் குடும்ப வாழ்க்கையை நினைத்துப் பார்த்தான். மனைவி, குழந்தை என சராசரியாக ஓடிக்கொண்டிருந்தாலும், தன்னைப் பெற்றவர்களை, உடன்பிறந்தவர்களை, உறவினர்களை நினைத்த மாத்திரத்தில் பார்க்கவோ பேசவோ முடிவதில்லை என்பது புரிந்தது. குடும்பம், குடும்பம் என்ற சராசரி சூழலில் தான் இருப்பது புரிந்தது. இவர்களுக்கு அந்தக் கவலை இல்லை, முத்துக்கு முத்தான சொத்துக்கு சொத்தான வாழ்க்கை! பார்க்க வறட்டுத்தனம் போல்தான் தெரிகிறது! ஆனால், அவர்கள் சந்தோஷமாகத்தானே உணர்கிறார்கள்?
“சார், கடைசியா ஒண்ணு. இந்தக் குட்டிப் பொண்ணு?”
“ம், அது எங்க வாழ்க்கைய மேலும் சந்தோஷமாக்க… ஒரு குழந்தைய வளர்க்கறது புது அனுபவம்தானே? ஒரு ஆர்ஃபன் ஹோம்லேந்து லீகலாத் தத்தெடுத்து வளர்க்கறோம். எல்லாரும் அன்ப பொழியறோம். நம்மகிட்ட இருந்து வந்தாத்தான் பிள்ளையா? இல்ல பேரன் பேத்தியா? அந்த சுவாதிய தேவதையாப் பார்க்கறோம். பெண் குழந்தைய வளத்ததுக்குக் காரணம் பின்னாடி அவளக் கல்யாணம் செஞ்சிக்கொடுத்திடலாம் இல்லியா!” என சரவணன் சொன்னார்.
“அதுக்கு அவளுக்கு விருப்பம் இருக்கணுமே?” குமார் கேட்க,
“இப்ப இருக்கற டி.வி., ஸ்கூல், காலேஜ், வேல பாக்குற எடம் இதெல்லாம் அவள விரும்ப வச்சிடும். நாங்க ஒண்ணா இருக்கறதுல ஒரு பிணைப்பு, அர்த்தம் இருக்கு. அவளுக்கு என்ன நிர்பந்தம்?”
சுவாதி விஷயத்தில் அவர்களின் அணுகுமுறை நியாயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. பிறகு குமார் விடைபெற்றான். அன்று அவனுக்கு அது ஒரு புது அனுபவமாக அமைந்தது.

x