கா.சு.வேலாயுதன்
இலக்கிய மேடை என்றால் பெரிய மேதைகளும், அறிஞர்களும், எழுத்தாளர்களும் கவிஞர்களும்தான் நிறைந் திருப்பார்கள். இந்தச் சம்பிரதாய மரபை உடைத்து, 6 வயது சிறுமி தன் வயதுடைய ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியர் புடைசூழ மேடையேறி தான் எழுதிய நூலை வெளியிட்டிருக்கிறார். அவர் நி.ச.தமிழினி. கோவை விஜயா பதிப்பகம் நடத்திய புத்தகக் கண்காட்சியில் இப்படியொரு நிகழ்வை சமீபத்தில் நடத்தி அத்தனை பேரின் மனதையும் கொள்ளை கொண்டாள் தமிழினி!
தமிழினி இதுவரை தான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பைத்தான் ‘ஒரு நா... ஒரு ஊர்ல...’ என்ற தலைப்பில் நூலாக்கி அந்த அரங்கில் வெளியிட்டாள். இந்த நூலை வெளியிட்டு அறிமுகப்படுத்திப் பேசியவர் கவிஞர் புவியரசு. இதே மேடையில் ‘சங்க இலக்கியத்தில் சமூக அறம்’ என்ற தலைப்பிலான பாவலர் இரணியனின் நூலை வெளியிட்டு, வாழ்த்துரை நல்க வந்த சிற்பி பாலசுப்பிரமணியம், செந்தலை ந.கெளதமன், இரணியன் மற்றும் வழக்கறிஞர் அருள்மொழி போன்றோர்கூட இந்தச் சிறுமியின் நூலை வியந்து பாராட்டியது இந்தக் குட்டிக் கதைசொல்லிக்குக் கிடைத்த மிகப்பெரிய விருது.
“தமிழினிக்கு இப்போது ஆறு வயது நிறைந்திருக்கிறது. இவள் 4 வயதிலிருந்தே கதை சொல்ல ஆரம்பித்து விட்டாள். ஒரு சமயத்தில் இவள் சொன்ன கதைகளை ஆடியோவில் பதிவு செய்ய ஆரம்பித்தோம். அதில் இவள் 5 வயதில் சொன்ன 24 கதைகள் டெலிட் ஆகிப்போச்சு. அதுக்கப்புறம் இவ சோமையம்பாளையம் பள்ளியில் ஒண்ணாம் வகுப்பு படிக்கும்போது சொன்ன 22 கதைகளைத்தான் இப்ப நூலாக்கி வெளியிட்டோம். இப்பவும் கதை சொல்லிட்டேதான் இருக்கா. நாங்களும் பதிவு செஞ்சிட்டேதான் இருக்கோம்!” என்று தமிழினியின் கதைகள் பற்றிய அனுபவத்தை அவளின் அம்மா நித்யா சொல்லச் சொல்ல அதையே ஒரு கதையாக எழுதலாம் போலிருந்தது.