பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. என் நண்பரின் மனைவிக்கு நடுத்தர வயது. அவருக்கு வலது கால் வளைந்திருந்தது. அதற்கு அவர் சிகிச்சை எடுத்ததாகத் தெரியவில்லை. ஒரு குடும்ப நிகழ்வில் அவரைச் சந்தித்தபோது, “நீங்கள் காலாகாலத்தில் எலும்பு டாக்டரைப் பார்த்து ஓர் ஆபரேஷன் செய்துகொண்டால் நல்லது” என்றேன்.
“காலில் தொந்தரவு எதுவும் இல்லாதபோது ஆபரேஷன் செய்துகொள்ளச் சொல்கிறீர்களே! நான் நன்றாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?” என்று கொஞ்சம் கோபமாகவும் கொஞ்சம் கேலியாகவும் கேட்டார்.
அவருக்கு இருக்கிற பிரச்சினையைப் புரிய வைப்பதற்கு அன்றைக்கு அவர் வாய்ப்புத் தரவில்லை. அப்புறம் நானும் அதை மறந்துவிட்டேன். ஆனால், நான்கு வருடங்களுக்குப் பிறகு, அதே முழங்கால் மூட்டில் வலி வந்து துடித்துக்கொண்டிருந்தவரை, அவரது கணவர் என்னிடம் சிகிச்சைக்கு அழைத்துவர, பழைய சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது.
“கால் உட்புறமாக வளைந்திருந்தால் மூட்டில் சமநிலை சிதையும். சீக்கிரத்தில் மூட்டு தேய்ந்து மூட்டு மாற்று சிகிச்சைவரை கொண்டுசெல்லும். அதைத் தடுக்க, மூட்டினைச் சமநிலைக்குக் கொண்டுவரும் ஆபரேஷன் செய்ய வேண்டும். இதற்கு ‘மூட்டு சீர்படுத்தும் ஆபரேஷன்’ (Corrective Osteotomy) என்று பெயர். இது ஓர் எளிய ஆபரேஷன். கால் உட்பக்கமாக வளைந்திருப்பவர்கள் நடுத்தர வயதுக்குள் இந்த ஆபரேஷனைச் செய்துகொண்டால் நல்லது. தேய்மானம் மேலும் அதிகரிக்காமல் இருக்கவும், மூட்டு மாற்று சிகிச்சையைத் தள்ளிப்போடவும் இது உதவும். காலம் கடத்தினால், இந்தச் சிகிச்சையின் முழுப் பலனையும் பெற முடியாது. எனவேதான், உங்கள் மனைவியிடம் அப்போதே எச்சரித்தேன். ஆனால், அவரோ தேவையில்லாமல் ஆபரேஷன் செய்யப் பரிந்துரைப்பதாக என்னைத் தவறாகப் புரிந்துகொண்டார்” என்று அவரது கணவரிடம் விளக்கம் சொன்னேன்.