“திருமண பந்தத்துக்கு வெளியே பாலியல் உறவு வைத்திருப்பது கிரிமினல் குற்றமல்ல...” என்ற உச்ச நீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பு பெரும் விவாதத்துக்கு வித்திட்டிருக்கிறது. தீர்ப்புக்கு எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கும் நிலையில், இந்து மக்கள் கட்சியினர் பூம்புகாரில் உள்ள கற்புக்கரசி கண்ணகியின் சிலையிடம் கருணை மனு கொடுத்து நியாயம் கேட்டார்கள்.
மனு கொடுத்ததற்கான காரணத்தை நம்மிடம் விளக்கிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கொள்ளிடம் சுவாமிநாதன், “திருமணமான ஆண் இன்னொருவர் மனைவியோடு விருப்ப உறவு வைத்திருப்பது குற்ற மில்லை எனச் சொல்லியிருக்கும் நீதிமன்றம் இதற்கு முன்பு, ‘ஓரினச் சேர்க்கையும் தவறில்லை’ எனச் சொன்னது. இதுபோன்ற தீர்ப்புகள் குடும்ப அமைப்பு முறையை சீர்குலைப்பதுடன் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நமது பண்பாட்டையும் அழித்துவிடும். அதனால்தான் திருமண உறவின் புனிதத்தை பாதுகாக் கும் வகையிலும், குடும்ப அமைப்பு முறைகளைக் காப்பாற்றவும், கள்ளத் தொடர்பு தண்டனைக்குரிய குற்றமாக நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கருணை மனுவை கற்புக் கடவுள் கண்ணகியின் சிலையிடம் தந்தோம்” என்றார்.
படிப்பை முடிச்சாலும் சான்றிதழ் நஹி!
கோவை ஜமீன் கோட்டாம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிஜிஎன்எம் என்னும் நர்சிங் மூன்றாண்டு படிப்பை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் கொடுக்க மறுத்து வருகிறது கல்லூரி நிர்வாகம். இதனால், படிப்பை முடித்த மாணவிகள் பணிக்குச் செல்ல வழியில்லாமலும் மேல் படிப்புக்குப் போக முடியாமலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு படிப்பை முடித்த மாணவர்களுக்கும் இதே நிலைதான். கல்லூரி நிர்வாகம் இன்னொருவரிடம் கைமாறிவிட்டதே இந்த இழுத்தடிப்புக்குக் காரணம் என்கிறார்கள். கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், தாசில்தார் மாவட்ட ஆட்சியர் எனப் புகார் மனுக்களைக் கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை” என்று கண் கலங்குகிறார் பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவரான ஜோதிமணி.