நதி போகும் கூழாங்கல் - எம்.பாஸ்கர்


ஒரு உயிர் உடலை விட்டுப் பிரிந்து போவதன் மூலமாகத்தான் எத்தனை எத்தனை பாடங்களை நமக்கு போதிக்கிறது காலம்!
நேற்று மதியம் வரை கல்யாணியாக இருந்திட்ட என் மாமியார், உயிர் பிரிந்த சில கணங்களில் வெறும் ‘பாடி’யாகிப்போயிருக்கிறாள். அதாவது பிணம். பிணமான ஒருவருக்காக, பிணமாகப் போகும் பலர் ஒன்றுகூடுவதன் பெயர்தான் இழவு வீடுபோல.

குய்யோ முய்யோவெனக் கத்திக் கதறும் பலரும் என் மாமியாரின் பிரேதத்துக்கு அருகில் செல்வதை, அதனைத் தொடுவதை, தொட்டுத் தூக்குவதை முடிந்தவரை தவிர்ப்பதும், தயக்கம் காட்டுவதும் வெளிப்படையாகவே தெரிகிறது. நெடுநாட்களாக நோய் குடியிருந்த உடலாயிற்றே, அதன் மூலம் ஏதேனும் நோய்த்தொற்று உள்ளிட்ட தேவையில்லாத பிரச்சினைகளைத் தவிர்க்க வேண்டும் என்கிற கவலை அவர்களுக்கு.

தெரிந்தோ தெரியாமலோ எனக்குப் பலவித இன்னல்களையும் இடர்ப்பாடுகளையும் தருவித்த என் மாமனாரைப் பார்க்கவே பாவமாயிருக்கிறது. ஒருவேளை உணவைக்கூட தள்ளிப்போட்டதும் இல்லை, தாமதமாக எடுத்துக்கொண்டதும் இல்லை. நோய்வாய்ப்பட்டிருந்தபோதிலும்கூட தள்ளாடித் தவழ்ந்தேனும் அவருக்கு உணவு தயாரித்துக்கொடுக்கத் துளி அளவும் சளைத்ததே இல்லை அறுபத்தைந்து வயதில் செத்துப்போன அந்தப் பெண்மணி.

``எங்க டாடியும் மம்மியும் சண்டை போட்டு நான் பார்த்ததேயில்ல, அவர்களுக்குள் அப்படி ஒரு இணக்கம் இருக்கு, நம்மள மாதிரி எல்லாம் இல்லவே இல்ல'' என்று என் மனைவி என்னிடம் சொல்லும்போதெல்லாம் சிரிப்பாக வரும். அந்தச் சிரிப்பைப் பார்க்கும் அவளுக்கு இரட்டிப்பாக கோபமும் எரிச்சலும் வரும். சண்டையிட்டுக்கொள்ளாதவர்கள் எல்லாம் நல்ல தம்பதிகள் என்பதில் எனக்கு எப்பவுமே உடன்பாடு இருந்ததில்லை.

x