இந்தியாவில் தொற்றாநோய்க் கூட்டத்தில் இணைந்துள்ள மற்றொரு நோய், மூட்டுவலி. “உட்கார்ந்தா எழுந்திருக்க முடியல… எழுந்தா உட்கார முடியல… சப்பணம் போடமுடியல… மாடிப்படியில் ஏற முடியல… மூட்டுவலி ஆளைக் கொல்லுது” என்று வேதனையுடன் முணுமுணுப்போர் முப்பதிலிருந்து நாற்பது கோடிப் பேர். இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்களிடம்தான் முணுமுணுப்பு அதிகம். அதிலும் நம் தாத்தா காலத்தில் 60 வயதில் தொடங்கிய மூட்டுவலி தற்போது 30 வயதில் தொல்லை செய்கிறது என்பதுதான் வேதனையின் உச்சம்; நவீன வாழ்வியல் தந்திருக்கும் ஓர் அச்சம் என்றும் இதைச் சொல்லலாம்.
மூட்டுவலி என்பது உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியதுதான். என்றாலும், முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியைத்தான் பொதுவாக ‘மூட்டுவலி’ (Osteoarthritis) என்கிறோம். காலில் உள்ள முக்கியமான ஜங்ஷன் முழங்கால் மூட்டு. நடக்கும்போது, ஓடும்போது, மாடிப்படி ஏறும்போது, உட்காரும்போது, எழுந்திருக்கும்போது, நடனம் ஆடும்போது என சகல அசைவுகளின்போதும் உடல் எடையைத் தாங்கும் முதன்மையான மூட்டு இது.
மற்ற மூட்டுகளோடு ஒப்பிடும்போது இதன் உள்ளமைப்பும் வித்தியாசமாகவே இருக்கிறது. முக்கியமாக, உடலின் எடையைத் தாங்கிக்கொள்வதற்காகவே மூட்டைச் சுற்றி அதிக எண்ணிக்கையில் இணைப்பு நாண்களும், ‘மெனிஸ்கஸ்’ எனும் குஷன்களும், மெழுகு போன்ற மசகுகளும் உள்ளன. ஆனால், இவற்றின் முக்கியத்துவம் புரியாமல் எப்படியெல்லாம் மூட்டுக்கு இடைஞ்சல் செய்கிறோம்!
மூட்டுவலிக்கு முகாந்திரம்!