நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த 150-வது ஆண்டு கொண்டாட்டங்கள் அக்டோபர் 2, 2018-ல் தொடங்குகின்றன. சுதந்திரத்தையும் அதைப் பெற்றுத்தந்த காந்தியையும் கொண்டாடும் அளவுக்கு அவரின் வழிமுறைகளை யாரும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. இன்றைய அரசியலில் கால்பதிக்க விரும்புவோர் காந்தியிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.
தென்ஆப்பிரிக்காவில் இந்திய மக்களுக்காக, குறிப்பாகத் தமிழர்களுக்காக, காந்தி போராடியது இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை. அகிம்சை, சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் ஆகிய காந்தியக் கொள்கைகளின் பரிசோதனைக் களமாக விளங்கியது தென்ஆப்பிரிக்க பூமி. அங்கே தன் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்திவிட்டு 1915-ல் இந்தியா திரும்பிய காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். அதன்பின், பிஹாரின் சம்பாரண், குஜராத்தின் கேடா, அகமதாபாத் ஆகிய மூன்று இடங்களிலும் காந்தி நடத்திய சத்தியாகிரகங்கள் இந்தியாவின் எதிர்காலத்தையே மாற்றியதோடு மட்டுமல்லாமல் இந்தியாவில் தனிப்பெரும் தலைவராக காந்தியை அடையாளப்படுத்தின.
சம்பாரண் சத்தியாகிரகம்
துணிகளுக்கு நீலச் சாயத்தைத் தரக்கூடிய அவுரி (Indigo) பயிருக்கு ஐரோப்பிய நாடுகளில் நெடுங்காலமாக அமோக வரவேற்பு இருந்தது. இந்தியாவைக் கையகப்படுத்திய ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனியும் ஆங்கிலேய அரசும் அவுரியை நமது மண்ணில் விளைவித்துப் பெரும் லாபம் கண்டார்கள். தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுக்கு நிகரான அத்துனை துன்பங்களையும் அவுரி பயிர் செய்த இந்திய விவசாயிகள் அனுபவித்தனர். அவுரி பயிர் செய்யும் ஆங்கிலேய பண்ணையார்களுடன் கிழக்கிந்திய கம்பெனியும் இங்கிலாந்து அரசும் அரசு அதிகாரிகளும் சேர்ந்துகொண்டு கொள்ளை நிகழ்த்தினார்கள். இதன் விளைவாக, பலவீனப்பட்ட ஏழைகள் பலவந்தமாக விவசாய அடிமைகளாக்கப்பட்டனர். மறுத்தோரும் எதிர்த்தோரும் உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானார்கள்.