திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் வடக்கு ரத வீதியில் சமோசா கடையில் இன்று மதியம் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து நடைபெற்றது. இதில் மூன்று பேர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி டவுன் வடக்கு ரத வீதியில் சாலையின் இருபுறமும் மிகவும் நெருக்கமாக தள்ளு வண்டி கடைகள் அதிகமாக உள்ளன. இந்த தள்ளு வண்டி கடைகளுக்கு அருகே கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தி சம்சா, வடை மற்றும் டீ, காபி தயாரித்து விற்பனனை செய்யும் கடைகளும் ஏராளமாக உள்ளது. மாலை, இரவு நேரங்களில் இப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமிருக்கும், மேலும் போக்குவரத்து நெரிசலும் காணப்படும். இந்நிலையில், இங்குள்ள சமோசா கடையில் இன்று மதியம் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து தீப்பற்றி எரிந்தது.
விபத்தில் கடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த சாலையோர தள்ளு வண்டியில் வைத்திருந்த அழகு சாதன பொருட்கள் கடைகளுக்கும் தீ பரவியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் கடை அருகில் நின்று கொண்டிருந்த கடை ஊழியர் மாரியப்பன் (37) ஒரு சிறுவன் உட்பட 3 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
அவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதிய நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் குறைவான அளவில் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனிடையே, நெல்லை டவுன் பகுதியில் செயல்படும் தள்ளு வண்டி கடைகள் முறையாக அனுமதி பெற்று கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறதா, என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என பொதுமக்களின் வலியுறுத்தியுள்ளனர்.