டாக்டர் கு. கணேசன்
‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்று சொல்வார்கள். இதன் அர்த்தம் ‘அளவுக்கு மீறிச் சாப்பிட வேண்டும்’ என்பது கிடையாது. ‘உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்’ என்பதை வலியுறுத்தும் உணவுப் பழக்கம் இது. செரிமானம் எனும் செயல்பாடு உணவு மெல்லுதலிலிருந்தே தொடங்குகிறது. அதற்குப் பற்களின் ஆரோக்கியம்தான் அடிப்படை. ஆனால், முகத்தின் அழகைக் கூட்டுவதற்கு நாம் காட்டும் அக்கறையில் கால் பங்குகூட பற்களைப் பராமரிப்பதற்குக் காட்டுவது இல்லை என்பதுதான் நிதர்சனம்.
பற்களைப் பொறுத்தவரை உணவைக் கூழாக்கும் அரவை எந்திரம் என்பதாக மட்டுமே அர்த்தப்படுத்திக்கொள்கிறோம். ‘பல் போனால் சொல் போச்சு’ என்று சொல்லிவிட்டதால், பேச்சுக்குப் பலம் சேர்ப்பவன் என்ற அளவில் திருப்திப்படுகிறோம். ஆனால், பற்களின் நலம் கெட்டால், அது இதயம் உள்ளிட்ட உறுப்புகளையும் உருக்கிவிடும் என்று மருத்துவர்கள் நாங்கள் சொல்கிறோம். ஏன்? பற்களின் பாதுகாப்புக்கும் பொது ஆரோக்கியத்துக்கும் தொப்புள்கொடி உறவு இருக்கிறது, அதனால்!
ஆறாவது படிக்கும் ஆனந்துக்கு அடிக்கடி கழுத்தில் நெரிகட்டி காய்ச்சல் வந்தது. டான்சில் வீக்கம்தான் காரணம் எனக் கருதி பல இடங்களில் சிகிச்சை எடுத்தனர். என்றாலும், அவனுக்குத் தற்காலிகமாக காய்ச்சல் சரியாவதும், மறுபடியும் திரும்புவதுமாக இருந்தது. கடைசியில் என்னிடமும் வந்தனர். நான் கவனித்தபோது, ஆனந்தின் எதிரி அவன் வாய்க்குள் ஒளிந்திருந்தது. ஆம், அவனுக்கு சொத்தைப் பல் இருந்தது. அதன் அடியில் சீழ் பிடித்திருந்தது. அதைச் சரிசெய்தால் மட்டுமே அவனுக்குக் காய்ச்சல் குணமாகும் என்று சொல்லி பல் மருத்துவரிடம் அனுப்பிவைத்தேன்.
கல்லூரி மாணவி கவிதா உடம்பெல்லாம் அரிக்கிறது என்று அவ்வப்போது என்னிடம் சிகிச்சைக்கு வருவார். அந்த அரிப்புக்குக் காரணம் அவருடைய சொத்தைப் பல் என்று சொன்னால், அதை அவர் ஏற்கவில்லை. “சொத்தையை அடைத்துவிட்டால் அரிப்பு நின்றுவிடும்” என்ற என் யோசனையைச் செயல்படுத்த அவர் தயாரில்லை. அவருக்குத் திருமணம் நிச்சயமானபோது உடலெங்கும் அரிப்பும் தடிப்பும் அவதரித்து, சருமம் அசிங்கமானதும், அலறிக்கொண்டு வந்தார். அப்போதும் நான் “சொத்தைப் பல்லைச் சரிசெய்தால் மட்டுமே அரிப்பு தீரும்” என்றேன். இத்தனை காலமும் அதற்கு அடம்பிடித்தவர், திருமணத் தேதி நெருங்குவதால் ஒப்புக்கொண்டார். சொத்தையை அடைத்த பிறகு அவருக்கு அரிப்பும் அடங்கியது.