நல்லாசிரியர் - செம்போடை தங்க.நாகேந்திரன்


“ஏங்க எந்திரிங்க” என்றாள் செல்வி.
“மணி என்ன ஆவுது?” என்று கேட்டார் மணியன்.
“மணி ஆறாவப்போவுது. டிரைவரை ஆறு மணிக்கு வரச்சொல்லிட்டு நீங்க இன்னும் தூங்குறீங்க. அவரு வந்து அரை மணிநேரம் வெய்ட் பண்ணிட்டு, ரெடி ஆவுங்க நான் கடைத்தெருவுக்குப் போயிட்டு வாரேன்னு போய்ட்டார்.”
“ஹரியும் ஹேமாவும் ரெடியாயிட்டாங்களா?” என்றார் எழுந்து அமர்ந்து கண்களைக் கசக்கியபடி.
“அவங்கள உங்க அம்மா குளிப்பாட்டுறாங்க” என்றபடி சாமி ரூமுக்கும் கிச்சனுக்கும் இடையில் பம்பரமாய்ச் சுழன்றாள். தலையை ஈரத்துணியால் இறுக்கியிருந்தாள். மணியன் துண்டை எடுத்துக்கொண்டு அரக்கப்பரக்க பாத்ரூம் நோக்கி ஓடினார். குலதெய்வக் கோயிலுக்கு இன்று பூஜை. தஞ்சாவூரிலிருந்து அண்ணனும் வேதாரண்யத்திலிருந்து தம்பியும் குடும்பத்துடன் வருகிறார்கள். பூசாரி ஒன்பது மணிக்கெல்லாம் வந்துவிடுங்கள் என்று நேற்றிரவே போன் பண்ணிவிட்டார். இப்போதே புறப்படாலும் தேத்தாகுடி செல்வதற்கு எட்டு மணி ஆகிவிடும். வழியில் டிபன் முடித்துவிட்டுக் கிளம்பினால் சரியாக இருக்கும்.
அவர் குளித்துவிட்டு ஹாலுக்கு வந்தபோது, “உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க” என்றாள்.
“யாரு?” என்று முணுமுணுத்தபடி வெளியே வந்தார்.
“இவன் கணேசனாச்சே. இவன் என்ன காலையிலே வந்திருக்கிறான்?!” என்று குழம்பினார் மணியன்.
சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு அமர்ந்திருந்
தவன் அவரைப் பார்த்ததும் இறங்கினான்.
“வாங்க. உள்ளே வாங்க!” என்றார்.
“நான் ஒண்ணும் உன் வீட்டுக்கு விருந்து சாப்பிட வரல. என் பிள்ளைய ஏன்யா அடிச்சே?” என்றான் முகத்தில் கடுமை கொண்டு!
மணியன் அதிர்ந்தார்!
“ஏன், என்னாச்சி?” என்றார் சன்னமான குரலில்.
“என்னாச்சின்னா? புரியலையே? செத்துப்
போய்ட்டானான்னு கேக்கிறியா?” என்றான் கணேசன்.
தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறான். அவருக்கு அவனிடம் மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியவில்லை.
“சொல்லுங்க. எனக்கு ஒண்ணும் புரியல” என்றார் பதற்றமாய்!
“நான் என்ன ஜோசியமா சொல்றேன்? எதுக்குய்யா என் பிள்ளைய அடிச்சே?” என்றான் மீண்டும்.
“ஏங்க... வந்தவங்களை சட்டுபுட்டுன்னு பேசி அனுப்
பிட்டு வாங்க நேரமாவுது” என்றாள் உள்ளிருந்தபடி அவரது மனைவி செல்வி.
நேற்று பள்ளியில் நடந்த சம்பவம் அப்போதுதான் மணியனுக்கு நினைவுக்கு வந்தது.
பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது தலைமை ஆசிரியர் அவரை அழைத்தார்.
“சார், இதக் கொஞ்சம் ஃபில்லப் பண்ணிக் கொடுங்க. மணி மூணாவது, இப்ப கேக்குறாங்க வட்டார வள மையத்திலேர்ந்து!” என்று அங்காலாய்த்தபடி அவரிடம் நீட்டினார்.
ஈராசிரியர் பள்ளி என்றாலும் தலைமை ஆசிரியர் ‘ரெக்கார்டு’ விஷயங்களை அவரே பார்த்துக்கொள்வார். தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே மணியனிடம் வேலைகளைக் கொடுப்பார். மாணவர்களிடம் கொஞ்சம் எழுத்துப் பயிற்சிகளைக் கொடுத்துவிட்டு ஹெச்.எம் கொடுத்த பேப்பர்களைத் தயார்செய்துகொண்டிருந்தார்.
அப்போது ஒரு சந்தேகத்தைக் கேட்பதற்காக மீண்டும் அவரது அறைக்குப் போய்விட்டு வருவதற்குள், அவரிடம் ஓடி வந்தான் நான்காம் வகுப்பு படிக்கும் முரளி நெற்றியில் ரத்தம் சொட்டச் சொட்ட!
“தர்ஷன் காம்பசால குத்திட்டான் சார்” என்றான்.
அவன் பின்னாலேயே நான்கைந்து மாணவர்கள் ஓடி வந்தார்கள்.
அவர்களும் “ஆமா சார்” என்றார்கள் கோரஸாய்!
எங்கோ குளிர் சாதன அறையில் உட்கார்ந்துகொண்டு மாணவர்களை அடிக்கக் கூடாது கண்டிக்கக் கூடாது என்று சட்டம் போடும் அதிகாரம் செய்பவர்களை நினைத்து இது போன்ற நேரங்களில் மணியனுக்கு மகா கோபம் வரும். ஓர் வேலை கொடுத்து அதைச் செய்யுங்கள் என்றால் அதற்குள் அடுத்தவனை அடிப்பது, அவன் புத்தகத்தைக் கிழிப்பது என்று பாடாய்ப் படுத்தி எடுத்துவிடுகிறார்கள்.
மணியனும் அரசுப் பள்ளியில் படித்து வந்தவர்தான்.
அவரைப் பள்ளியில் சேர்த்தபோது, “ உயிர மட்டும் வச்சிட்டு நல்லா உரிங்க சார்!” என்று அவரது அப்பா ஆசிரியரிடம் சொன்னது இன்றும் அவருக்கு நினைவில் உள்ளது.
ஆனால், நிலைமை இன்று அப்படியில்லை. அதற்காக மணியன், ‘யார் பிள்ளையோ எப்படியோ போகட்டுமே’ என்று நினைக்கக்கூடிய ஆசிரியர் இல்லை. மாணவர்களுக்கு பாடம் புகட்டுவதில் மணி
யன் ஆர்வமாக இருப்பார்.
யாரோ ஒரு ஆசிரியர் தனக்காக உழைத்ததால்தான் தன்னால் இன்று ஓர் ஆசிரியராக நல்ல நிலையில் இருக்க முடிகிறது என்று உறுதியாக நம்புபவர். தன்னையே பெற்றோராகவும் தன்னையே ஆசிரியராகவும் நினைத்து மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்துபவர். இளகிய மனம் கொண்டவர்தான். மாணவர்களைத் தண்டிக்கக்
கூடாது என்று எண்ணுபவர்தான்! இருந்தும் மணியனின் கண்களை முரளியிடமிருந்து வந்த ரத்தம் மறைத்தது.
தர்ஷனைக் கூப்பிட்டு, அவனிடம் “நீ எழுதின நோட்டை எடுத்து வா” என்றார்.
“நான் எழுதல சார். என்கிட்ட பேனா இல்ல சார்” என்றான் தர்ஷன். இவன் எப்போதுமே இப்படித்தான். சரியாகப் படிப்பதும் இல்லை. எந்த வேலை சொன்னாலும் செய்வதும் இல்லை. தர்ஷனை இழுத்து முதுகில் இரண்டு போட்டார். அதன் விளைவுதான் இதோ அவனது தந்தை கணேசன் எதிரி வீட்டு வாசலில் நிற்பது போல நின்றுகொண்டிருக்கிறான்.
“சொல்லு வாத்தியாரே... புத்தகத்தில் இருக்கிறத சொல்லிக்கொடுக்கத்தான் உனக்கு அரசாங்கம் சம்பளம் குடுக்குது. ஊரான் பிள்ளையை அடிச்சிக் கொல்றதுக்கு இல்ல.”
மணியன் விக்கித்துப்போய் நின்றுகொண்டிருந்தார். அவனை எப்படிச் சமாளிப்பது என்று அவருக்குத் தெரியவில்லை. பள்ளியை நல்ல நிலையில் வைத்திருப்
பதற்காக ஊர் மக்களிடம் மட்டுமல்லாமல் அதிகாரிகளிடமும் அவருக்கு நல்ல பெயர் உண்டு. ஆனால், கணேசன் மட்டும் இப்படி நடந்துகொள்வதற்குக் காரணம் உண்டு.
கடந்த வாரம் மணியன் வடக்கு வெளியைத் தாண்டி பள்ளிக்கு வந்துகொண்டிருந்தபோது கணேசன் பைக்கை மறித்தான்.
“என்னங்க ஊருக்கு வர்றீங்களா? உட்காருங்க” என்றபடி வண்டியை நிறுத்தினார் மணியன்.
“இல்லே... ஒரு நூறு ரூபா பணம் கொடுங்க. சாயந்தரம் பள்ளிக்கொடத்துல கொண்டாந்து தர்றேன். கட்டிங் சாப்பிடணும்’’ என்றான்.
“என்கிட்ட சில்லறை இல்லேங்க. வேற யாருகிட்டயாவது கேட்டுப்பாருங்க...”என்று சொல்லிவிட்டு வண்டியை எடுக்கப்போன மணியனைத் தடுத்தான்.
“அரசாங்கம்தான் வாத்தியாருங்களுக்கு அள்ளிக்கொடுக்குது. அம்பதாயிரம் ஒரு லட்சம்ன்னு சம்பளம் வாங்கறீங்க. நூறு ரூபா இல்லைன்னு சொல்றீங்க. தலையை விண்ணுவிண்ணுன்னு தெறிக்குது. கொடுங்க சார்... ஒண்ணும் குடிமுழுகிப்புடாது’’ என்றான் கணேசன்.
மணியனுக்கு ஆத்திரம் வந்தது. “என்கிட்ட காசு இல்ல. இருந்தாலும் தண்ணியடிக்கவெல்லாம் நான் பணம் தர மாட்டேன்!” என்று கண்டிப்புடன் கூறிவிட்டு விரைந்தார்.
அந்தக் கோபம்தான் அவனை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
மணியன் சொன்னார். “கணேசன், நான் சொல்றதக் கேளுங்க. உங்க பையன் படிப்பில சுத்தமா கவனம் இல்லாம இருக்கான். நிறைய வால்தனம் பண்றான். அதனாலதான் லேசா தட்டுனேன்” என்றதும் கணேசன் ஆவேசமானான்.
“லேசா தட்டுனியா? நான் உம் மாதிரி உட்கார்ந்துகிட்டு சம்பாதிச்சி புள்ள வளர்க்கல. மூட்டை தூக்கி ரத்த வேர்வை சிந்தி வளர்க்கறேன்ய்யா. நாசமாப் போய்டுவே. என் புள்ளயை அடிச்ச கையி அழுகிப்போயிடும்.’’
மணியன் ஒரு கணம் ஆடிப்போனார்.
இதனை உள்ளுக்குள் இருந்து கவனித்தபடி நின்ற மணியனின் மனைவி செல்வி பத்ரகாளியாய் வெளியே வந்தாள்.
“நாங்க கோயிலுக்குக் கிளம்பிக்கிட்டு இருக்கோம். வீட்டு வாசல்ல நின்னு என்னய்யா சாபம் விடுறே நீ... மரியாதையாப் போயிடு. உன் புள்ளைய இனிமே ஏன்னு கேட்டாருன்னா நேரா இங்க வந்து என்னைப் பத்து அடி செருப்பால அடிச்சிட்டுப் போ’’ என்றவள் அடக்கமாட்டாமல் ‘ஹோ’வென்று கதறினாள். இதனை சற்றும் கணேசனே எதிர்பார்க்கவில்லை. அவளையே அதிர்ச்சியோடு பார்த்தபடி நின்றான்.
“தங்கச்சி நீ சொல்றியேன்னு போறேம்மா. என் மவன அடிச்ச கையை ஒடிக்கத்தான் வந்தேன்’’ என்று சொல்லிவிட்டு சைக்கிளில் ஏறினான்.
அதன் பிறகு, டிரைவர் வரவே புறப்பட்டார்கள். செல்விக்கு முகமே சரியில்லை. கடுகடுவென்றிருந்தாள். இவர்களுக்கு முன்பே தேத்தாகுடி முனியன் கோயிலுக்கு உறவினர்கள் வந்துவிட்டார்கள். சரியாக பன்னிரண்டு மணிக்கு பூஜை முடிந்து, கொண்டுவந்த உணவுகளைப் பங்கிட்டுச் சாப்பிட்டார்கள். மண்டபத்தில் ஓய்வெடுத்துவிட்டு சரியாய் நாலரை மணிக்குப் புறப்பட்டார்கள்.
வீட்டுக்கு வந்தும் செல்வி இது குறித்து எதுவும் பேசவில்லை. இரவு குழந்தைகள் தூங்கியதும் அருகில் வந்து அமர்ந்தாள். மணியன் அவள் பக்கம் திரும்பினார்.
அவர் மார்பு மீது கை போட்டபடி சொன்னாள். “நான் கோயிலுக்கு வந்தேனே ஒழிய நிம்மதியா சாமி கும்பிடலேங்க...”
“தெரியும் செல்வி. கெடக்கிறான் விடு, குடிகாரன்.”
மணியன் அவளை சமாதானப்படுத்தும் நோக்கில் பேச்சை எடுத்தார். அவள் இடைமறித்து சொன்னாள். “இந்தப் பேச்செல்லாம் கேக்கணும்ன்னு தலையெழுத்தாங்க நமக்கு? நான் ஒண்ணு சொன்னா கேப்பீங்களா?” என்றவளைக் கூர்ந்து பார்த்தார் மணியன்.
“நீங்களும் பத்து வருஷமா அந்த ஊருல உழைக்கிறீங்க. என்ன மரியாதை இருக்கு? போனோமா வேலையைப் பார்த்தோமான்னு வர வேண்டியதுதானேங்க? பாடம் 
நடத்தலேன்னு எந்த வாத்தியாரையாவது அரசாங்கம் வேலையை விட்டுத் தூக்கியிருக்கா? பொம்பள புள்ளைங்கிட்ட தப்பா நடந்துகிட்டா பிரச்சினை வரும். மத்தபடி வாத்தியார் உத்தியோகம் நிம்மதியான வேலை... அதுலேயும் பிரச்சினையைக் கொண்டு வர்றது நீங்கதாங்க” என்றவள் சற்று நிறுத்தித் தொடர்ந்தாள்.
“எட்டே முக்காலுக்குப் பள்ளியில இருக்கணும்னுட்டு ஓடுறீங்க? புள்ளைங்க கிழிச்ச புத்தகத்தையெல்லாம் வீட்டுக்கு அள்ளிக்கிட்டு வந்து ஒட்டி, தச்சிக்கிட்டுப் போறீங்க. என்னமோ காலேஜ்ல செமினார் அட்டெண்ட் பண்ற மாதிரி விடியவிடிய ஆன்லைன்ல போய் நோட்ஸ் எடுக்குறீங்க. என்ன பிரயோஜனம் சொல்லுங்க?” செல்வி அவனை ஏறிட்டுப் பார்த்துக் கேட்டாள்.
மணியன் தலை குனிந்தபடி உட்கார்ந்திருந்தார்.
“பாடம் நடத்தலைன்னா எந்த வாத்தியாரையாவது வேலையை விட்டுத் தூக்கியிருக்காங்களா?”
பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த செல்வி கேட்கிறாள். தினமும் வீட்டுக்கு வரும் செய்தித்தாளைப் படித்துவிட்டுப் பள்ளிக்கூடம் பற்றிய அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறாள். மணியனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மணியன் யோசித்தார். நாம்தான் அதிகப்படியாக நடந்துகொள்கிறோமோ? மற்ற ஆசிரியர்கள் போல பள்ளிக்கு போனோம், வந்தோம் என்று இருந்திருக்கலாமோ? ஏதோ ஒப்புக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து விட்டு விட்டிருக்கலாமோ? ஒவ்வொரு மாணவன் மீதும் அக்கறை எடுத்து அவர்கள் எதிர்காலம் குறித்துக் கவலைப்பட்டு பள்ளிக்காக உழைத்ததெல்லாம் வீணோ?
மணியன் ஒரு முடிவுக்கு வந்தார். கணேசன் மகன் தர்ஷனைக் கண்டுகொள்ள வேண்டாம். அவன் படித்தால் என்ன கெட்டால் என்ன? மற்ற பிள்ளைகளிடமும் தர்ஷனிடம் யாரும் பேச்சு வைத்துக்கொள்ளக் கூடாது என்று சொல்லிவிட்டால் யாரும் அவனிடம் நெருங்க மாட்டார்கள். வகுப்பறையில் அவன் தனிமைப்படுத்தப்பட்டாலே அவன் மனரீதியாக பாதிக்கப்பட்டு அத்துடன் வீணாகி விடுவான். குட்டிச்சுவராகட்டும்!
நமக்கென்ன வந்தது? அவன் அப்பன் கொடுத்த ‘நல்லாசிரியர் விருது’ போதும். மணியன் செல்வியின் தலையைக் கோதியபடி தூங்கிப்போனார்.
மறுநாள் திங்கட்கிழமை!
சரியாக ஒன்பது மணிக்குப் பள்ளி வளாகத்தில் வண்டியை நிறுத்தினார்.
“யேய். சாரு வந்துட்டாங்க..!”
என்று கோரசாய்க் கத்தியபடி பிள்ளை
கள் ஓடி வந்தார்கள். அவரையும் அறியாமல் அவரது கண்கள் தர்ஷ
னைத் தேடின. தர்ஷன் ஒரு தட்டுடன் வேகமாய் ஓடிவந்து அவரிடம் நீட்டி, “சார். எனக்கு பர்த்டே, சாக்லெட் எடுத்துக்கங்க” என்றான்.
மணியன் ஒரு கணம் ஸ்தம்
பித்து அடுத்து விநாடியே சுதாரித்து, சாக்லெட்டைக் கையில் எடுத்துக்கொண்டு “ஹேப்பி பர்த்டே டூ யூ” என்று வாழ்த்தி அவனைத் தன் பிள்ளையைப் போல் அணைத்தபடி வகுப்பினுள் நுழைந்தார்.

x