சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பெலா டார் எடுத்த அற்புதமான திரைப்படம் ‘வெர்க்மைஸ்டர் ஹார்மனீஸ்’. இதன் தொடக்கக் காட்சி ஒரு மது விடுதியில் தொடங்குகிறது. படத்தின் இளம் நாயகனான யானோஸ் வலுஸ்கா தனது மூன்று நண்பர்களை வைத்து சூரியன், பூமி, நிலவு நடனத்தை நிகழ்த்துவார். சூரியன் போன்று ஒருவர் நடுவில் நிற்க இன்னொருவர் பூமியின் வேடத்தில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுவார். பூமியை நிலவு பாத்திரத்தில் ஒருவர் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு பூமியைச் சுற்றுவார். ஆக, நிலவு மனிதர் ஒரே நேரத்தில் பூமியையும் சூரியனையும் சுற்றுவார். இந்த அறிவியல் விளக்கம் ஒரு அற்புதமான நடனம்போல் படத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அருகிலிருந்த என் நண்பர் கேட்டார், “சூரியன் பாத்திரத்தை ஏற்ற நபர் அப்படியே இருக்கிறாரே. உண்மையில் சூரியன் அசையாமல் இருக்கிறதா, அல்லது சுற்றுகிறதா?”
கொஞ்சம் தலைசுற்றவைக்கும் கேள்விதான்! நாம் எல்லோரும் தோற்றத்தை நம்பி வாழ்பவர்கள்; எதையாவது பற்றி புகார் கூறினால், “நீ கண்ணால் பார்த்தியா?” என்று கேள்வி கேட்பவர்கள். ஆனால், கண்ணால் பார்ப்பதுவும் முழு உண்மையாக இருக்காது என்பதற்கு பூமி, சூரியனின் சுழற்சிகளையும்கூட நாம் சான்றாக எடுத்துக்கொள்ளலாம்.
கோப்பர்நிக்கஸின் கண்டுபிடிப்பு
வெகு காலம் வரை சூரியன்தான் பூமியைச் சுற்றிவருகிறது என்று மனிதர்கள் நம்பினார்கள். போலந்தைச் சேர்ந்த கோப்பர்நிக்கஸ் என்ற அறிவியலாளர்தான் ‘பூமியைச் சூரியன் சுற்றவில்லை. பூமிதான் சூரியனைச் சுற்றிவருகிறது’ என்ற கோட்பாட்டுக்கு 16-ம் நூற்றாண்டில் அடியெடுத்துக்கொடுத்தார். பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் குழந்தை சாலையோரம் உள்ள மரங்கள்தான் ஓடுகின்றன என்றும், பேருந்து அப்படியே இருக்கிறது என்றும் நம்புவதைப் போல அதுவரை மனிதர்கள் ‘சூரியன்தான் பூமியைச் சுற்றிவருகிறது’ என்று நம்பிக்கொண்டிருந்தார்கள்.