புதுச்சேரி: புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் ஆண்கள் சிகிச்சை பிரிவில் பழைய சாதனங்கள் குவித்து வைக்கப்பட்டது தொடர்பான விடியோ வெளியானதை தொடர்ந்து அதனை அகற்றி விசாரணை அறிக்கை தர சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை அருகே அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு படுக்கை வசதிகள் தொடங்கி பல்வேறு குறைபாடுகள் உள்ளது. போதியளவில் சிகிச்சைக்கான சாதனங்களும் பயன்பாட்டில் இல்லை. இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அங்குள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் புதுவை அரசு மருத்துவமனையில் தனி கிடங்கு வசதி இல்லாததால், மருத்துவமனையில் வீணான பொருட்களை ஆண்கள் சிகிச்சை பிரிவில் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டு காயலான் கடை போல காட்சியளிக்கிறது.
இதை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டார். இது குறித்து சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலுவிடம் கேட்டதற்கு, "பழைய பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்த உத்தரவிடப் பட்டுள்ளது. மருத்துவ கண்காணிப்பாளர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி உடனடியாக விசாரணை அறிக்கை தர சொல்லியுள்ளோம்" என கூறினார்.