நிற்காமல் தானே சுற்றும் ராட்டினம்... சாத்தியமா?


ஆசை

மனித குல வரலாற்றில் மிக நீண்ட தேடல் சாகாவரம் பெறுவதற்கான தேடல்தான். அறிவு வளர்ச்சி பெற ஆரம்பித்து ஒரு கட்டத்தில் தமக்கான சாகாவரத்துடன் இயந்திரங்களுக்கான சாகாவரத்தையும் மனிதர்கள் தேட ஆரம்பித்தார்கள்.

அது என்ன இயந்திரங்களுக்கான சாகாவரம்? ஒரு இயந்திரமானது என்றென்றும் நிற்காமல் இயங்கினால் அதுதான் அதனுடைய சாகாவரம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தேடல் இது. ஒரு வகையில் இயந்திரங்கள் மூலம் மனிதர்கள் தமக்கான சாகாவரத்தைத் தேடும் முயற்சியாகவும் இதை நாம் பார்க்கலாம்.
அதுமட்டுமல்லாமல், இந்தப் பூமியில் உள்ள எரிபொருள் உள்ளிட்ட ஆற்றல் வளங்கள் ஒரு கட்டத்தில் தீர்ந்துவிடக்கூடியவை. வெளியிலிருந்து எந்த ஆற்றலும் தேவைப்படாமல் என்றென்றும் தாமாகவே இயங்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் எரிபொருள்களை நாம் நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை அல்லவா! இதுதான் தேடலின் பிரதானமான காரணம் என்றாலும், மனிதர்களின் சாகச நாட்டத்துக்கும் இதில் கணிசமான பங்கிருக்கிறது.

நான் வண்டி ஓட்டிக்கொண்டு செல்லும்போது வண்டியின் வேகத்தை அதிகரிப்பதற்காக எனக்குப் பின்னே உட்கார்ந்திருக்கும் என் பையன் என் முதுகில் கையை வைத்து என்னை வேகமாகத் தள்ளுவதுண்டு. கார் வைத்திருப்பவர்களின் வீட்டுக் குழந்தைகள் காருக்குள்ளே உட்கார்ந்து காரைத் தள்ளுவதுண்டு. அவர்கள் தள்ளுவதால் அந்த கார் நகர்ந்தால் எப்படி இருக்கும்? ஒருவகையில் அதுபோன்ற முயற்சிதான் ‘சாகாவர இயந்திர’த்துக்கான தேடலும்.

x