கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை


சுந்தர.விமலநாதன்

சுவாமிமலை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளை நேர்மை தன்மையுடன் தேர்ந்தெடுக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாகத் தமிழக முதல்வருக்கு, அந்தச் சங்கத்தின் தலைவர் சுவாமிமலை சுந்தர. விமலநாதன் மற்றும் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் அனுப்பி உள்ள மனுவில், ‘தமிழகத்தில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு புதிதாக ஆர்.சி.சி. கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதற்கு, தமிழக முதல்வர், கலைஞரின் கனவு இல்லம் திட்டம் என அறிவிக்கப்பட்டு அதற்காக ரூ. 3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த ஆர்.சி.சி மேற்கூரையுடன் கூடிய வீடுகள் வேண்டும் என மாவட்டம் தோறும் நடைபெறும் மாற்றுத் திறனாளிகள் சிறப்புக்குறை தீர் கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர்களிடம், அவர்கள் மனு அளித்துள்ளனர். இன்னும் புதிதாக மனுக்கள் வழங்கிடவும் மாற்றுத் திறனாளிகள் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

அதன்படி தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் போது தவறாமல் தமிழகத்தில் உள்ள ஏழை, பொருளாதாரத்தில் பின் தங்கிய, குடிசையில் வாழ்கின்ற அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் விடுதல் இல்லாமல் சேர்த்துக் கொள்ள முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்படுகின்ற வீடுகளை அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல், தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்காமல் தரமான வீடுகளாக கட்டிக்கொள்வதற்குப் பயனாளிகளுக்கு முழு உரிமையை வழங்க வேண்டும்.

இத்திட்ட பயனாளிகளைத் தேர்வு செய்வதில் வெளிப்படை மற்றும் நேர்மை தன்மையுடன் தேர்ந்தெடுப்பதற்கு, சிறப்புக் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அதில், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் பற்றிய முழுமையான முகவரிகள், ஆதார் எண்களுடன் கூடிய அனைத்து தகவல்களையும் அந்தந்தப் பகுதி அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வையில் படும்படியும் இணையதளத்திலும் வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கடந்த காலங்களில் ஏராளமான போலி பயனாளிகள், முறைகேடு, மோசடிகள் நடைபெற்றுள்ளன. அது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அதிகாரிகள் 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களுக்குச் சம்மன் அழைப்பாணைகள் அனுப்பியுள்ளது. ஆகவே அதுபோன்ற தவறுகள் ஏதும் நடைபெறாத வண்ணம் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.