கரு.முத்து
ஒருகாலத்தில், திமுக தலைவர் கருணாநிதியைத் தாக்கிப் பேசுவோர், ‘திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி’ என்பதுதான் திமுக என்பர். கட்சியைப் பொறுத்தவரை அந்த விமர்சனம் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், திருக்குவளை மண்ணைப் பொருத்தவரை அதுதான் நிஜம். தனது பிறந்த மண் மீது மாறாப் பற்றுக்கொண்டவரான கருணாநிதியின் பிரிவுத் துயரம் தாங்க மாட்டாமல் இன்னும் அந்த மண்ணின் மக்கள் அவரது நினைவலைகளில் மூழ்கியிருக்கிறார்கள். கருணாநிதி வயதுடைய ஆட்கள் குறைந்துவிட்டாலும்கூட அவருடன் பாசமும் பரிவுமுமாக கேலியும் கிண்டலாகவும் பேசித் திரிந்தவர்களிடம் அவரைப் பற்றிச் சொல்ல ஆயிரம் கதைகளுண்டு. அதைக் கொஞ்சம் கேட்டுவரலாம் என்று திருக்குவளைக்குச் சென்றேன்.
சின்னஞ்சிறு கிராமமான திருக்குவளை இன்று தனி தாலுகாவாக இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, வட்டத் தலைமை மருத்துவமனை, அரசு மேனிலைப்பள்ளி எனச் சகல வசதிகளும் இருக்கின்றன எனில் காரணம் கருணாநிதி. அவர் நாத்திகர் என்றாலும்கூட யார் மனமும் புண்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். அதனால்தான் அவர் எப்போது ஊருக்கு வந்தாலும் அவரது குலதெய்வக் கோயிலான அங்காள பரமேஸ்வரி கோயிலில் அளிக்கப்படும் முதன் மரியாதையை ஏற்றுக் கொள்வார். அதன் பின்பு நடந்தே வீட்டுக்கு வருவார்.
வரும் வழியில் நண்பர்களின் வீடுகளுக்குள் உரிமையோடு நுழைந்து உறவு கொண் டாடுவதும் உண்டு.கருணாநிதியை சிறுவனாகப் பார்த்தவர்களில் பெரும்பாலோனார் இப்போது இல்லை. இருப்பவர்களில் அவரை நன்கு தெரிந்தவர்கள் தனபாக்கியம் அம்மாளும் சுப்பையாவும்தான். அவர்களுக்கு கருணாநிதியின் பெயரைச் சொன்னாலே முகமெல்லாம் மலர்கிறது. திருக்குவளை தியாகராசர் கோயிலுக்கு அருகிலிருக்கும் சின்னஞ்சிறு தொகுப்பு வீட்டில் படுத்திருந்தார் தனபாக்கியம் அம்மாள். இவரது திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக வந்தவர் கருணாநிதி. அதில் இவருக்கு நிலைகொள்ளாத பெருமை. வயது 97 ஆகிவிட்டாலும் நடையுடையாக இருக்கிறார் தனபாக்கியம்.