மரணக் கடன்- ஹரணி


மரண அறிவிப்பு செய்துகொண்டு போனார்கள் ஆட்டோவில்.
“வருந்துகிறோம். நமது முன்னாள் வட்டாட்சியரும் கம்பன் பேரவையின் தலைவருமான திரு. கணேசமூர்த்தியின் துணைவியார் திருமதி கோதை அவர்கள் இன்று காலை ஆறு மணிக்கு  இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரின் இறுதிஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு அம்மையாரின் இல்லமான வள்ளுவர் நகரிலிருந்து புறப்படும் என்பதையும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.”
தெருவிலிறங்கிக் கடைத்தெருவுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கையில் இந்த அறிவிப்பைக் கேட்டான் நாகராஜன்.
அவனுக்கு கணேசமூர்த்தியை நன்கு தெரியும். பணிக்காலத்தில் பிழைக்கத் தெரியாத தாசில்தார் என்று பெயரெடுத்தவர். அதற்காக ஒருமுறை அவரை சிக்கலில் மாட்டவைத்து மெமோ கொடுத்தார்கள். அதனால் உதவி ஆட்சியர் பதவி உயர்வை இழந்தவர்.
 “எனக்குப் பதவி உயர்வு முக்கியமல்ல. வேலை பார்த்து, பணிஓய்வு பெறும்போது மனநிறைவோடு வரவேண்டும். எப்படி வேலைக்குப் போகும்போது கனவுகளுடன் போய்ச் சேர்ந்தோமோ, அதே உணர்வுதான் பணி ஓய்விலும் இருக்க வேண்டும். மெமோங்கறது நேர்மையானவங்களுக்குக் கிடைக் கிற உயர்ந்த விருது. அதைக் கொடுக்கறவங்களுக்கு இந்தப் பிறவியில கிடைக்காதது” என்று எளிமையாக உதறியவர், அப்படியே இருந்து பணிஓய்வு பெற்று வந்தவர்.
தமிழ் மீது அப்படியொரு பற்று. எனவேதான் கம்பன் பேரவையைத் தொடங்கினார். வாழ்க்கையில் இலக்கியம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியவர். கம்பனைப் படிக்காதவர் வாழ்வது வீண்தான் என்று வாதிடுபவர்.  வயது வித்தியாசம் இல்லாமல் நன்றாகத் தமிழ் பேசுபவர்களைக் கொண்டு பேச வைப்பார்.
  தானே அதற்கான அழைப்பைத் தயார்
செய்து அஞ்சலட்டையில் ஒவ்வொருவருக்காக எழுதிப்போட்டு வரவழைப்பார். பத்து அல்லது பதினைந்து பேர்கள் மட்டும்தான் வருவார்கள். அதற்கெல்லாம் கவலைப்படமாட்டார். `என்ன செய்யறது அவங்களுக்குக் கொடுத்துவைத்தது அவ்வளவுதான். நல்ல தமிழ் கேட்கக் கொடுத்து
வைக்கவில்லை’ என்று எளிதாக எடுத்துக்கொண்டு போய்விடுவார்.
அவரின் மனைவி கடந்த பத்து வருடங்களாக சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவந்தார். தன்னுடைய ஓய்வூதியத் தொகை ஒப்படைப்புப் பணம் மற்றும் ஓய்வு பெற்றபின் வந்த தொகை எனக் கிட்டத்தட்ட இதுவரை ரூ.20 லட்சம் செல
வழித்தாயிற்று. அவருக்கு ஒரே மகன். அவனுக்கு நல்லபடியாகத் திருமணம் செய்துகொடுத்து
விட்டார். அவன் லண்டனில் இருக்கிறான். பல வருடங்களாயிற்று அவன் சென்று. ஒரு முறை வந்துவிட்டுப் போனான். அப்புறம்  தொலைபேசியில் பேசுவான். அதுவும் குறைந்துவிட்டது. கணேச
மூர்த்தியும் அவரது மனைவியும் பேசுவார்கள். நாலைந்து முறை தொடர்ந்து அழைத்தால் ஒரு தடவை இணைப்பு கிடைக்கும். “அப்பா... நான் அவசர வேலையா இருக்கேன். அப்புறம் பேசறேன்” என்றபடி வைத்துவிடுவான். அப்புறம் பேசவே மாட்டான். இப்படியாக, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகிப்போனது. இருந்தும் இல்லாத உறவாக ஆகிவிட்டது.
“யார் வாழ்க்கையும் யார் கையில இல்லை தம்பி. இப்படித்தான் ஆகணும்னு விதி இருக்கு. அவ்வளவுதான். நம்மோட கடமை என்ன? பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை உருவாக்கிக் கொடுக்
கறதுதானே! அந்த வாழ்க்கையில நாம எப்படி 
நுழைய முடியும்? உறவுகள் ஒட்டறதும் அறுந்து
போறதும் இறைவனோட எழுத்து.  அதத அதோட போக்குல விட்டுடவேண்டியதுதான்.”
இப்படி  எல்லாவற்றையும் எளிதாகவே எடுத்துக்
கொள்ள முடிந்தது அவரால்.
“எப்படிப் போய்க்கிட்டிருக்கு ரிட்டயர்டு லைஃப்?” என்று யாராவது கேட்பார்கள்.
உடனே சொல்லுவார். “எங்க நேரம் இருக்கு. முன்னவிட இப்பத்தான் ரொம்ப வேலையா இருக்கேன். பகல் முழுக்க மனைவிக்கு மருத்துவக் கடமை. அப்புறம் கம்பன் இருக்காரு. பொழுது பத்த மாட்டேங்குது. ஒரேயொரு பிரச்சினை… வயசுதான். உடம்பு தளர்ந்துபோச்சு. ஒத்துழைக்க மாட்டேங்குது. ஆனா மனசு அப்படியேதான் இருக்கு. இன்னும் 100 வருஷம்கூட உழைக்கும்.”
 நிறைய கூட்டம் வந்திருந்தது.
ஏராளமான மாலைகள். போடப் போட அள்ளிக்கொண்டு வந்து வெளியே குவித்தார்கள். மாலைகள் குவியலாகக் கிடந்தன.
நாகராஜன் கையில் மாலையோடு போக... “வாங்க தம்பி…” என்று உள்ளே அழைத்துப் போனார் கணேசமூர்த்தி.
வெளியே வந்ததும் நாகராஜனிடம் “ஏன் தம்பி... உங்களுக்கு நிரந்தர வேலை இல்ல… மாலையெல்லாம் 
எதுக்குச் செலவு? அது 
ஒரு வேலைக்கு விண்ணப் பிக்க உதவுமுல்ல. ஆறு
தலைப் பேச்சுல சொல்லாம்
 தம்பி” என்றதும் அதிர்ந்து போனான் நாகராஜன். இப்படியொரு மனுஷன் இருக்க முடியுமா?
“இல்ல சார். அம்மாவுக்கு என்னோட கடைசி மரியாதை சார்” என்றான். அதற்கு மேல் பேசவில்லை. “தம்பிக்கு டீ கொடுங்க” என்றார்.
அவரின் குணத்துக்காக அத்தனை கூட்டமும் அப்படியே இருந்தார்கள். சிலர் ஆளுக்கொரு வேலை பார்த்தார்கள்.
பெரிய கூட்டத்துடன் தெருவெங்கும் பூப் போர்வை விரித்தது
போல மலர்களை உதிர்த்துக்கொண்டு போக ஊர்வலம் கிளம்பியது.
எல்லாம் முடிந்து திரும்பி வந்தார்கள்.
இதுவரை இரண்டு பேராக இருந்த அந்த வீடு ஒற்றை வீடானது.
“அம்மா இல்லாம கஷ்டமா இருக்கும் சார். என்ன பண்றது? எல்லாரும் ஒருநாளைக்குப் போக வேண்டியதுதானே, விதி முடிஞ்சா” என்றார் ஒருவர்.
“உண்மைதான் சார். என்னா, காலையில சும்மா உக்காந்திருப்
பேன். எதாச்சும் பேசிக்கிட்டேயிருப்பா. பேச்சுத் துணையா இருந்தா” என்றார் கணேசமூர்த்தி.
“பையன் வரல்லியே?” என்றார் ஒருவர். இப்படி 
ஒருவராவது கேட்காமல் இருக்க மாட்டார்களே.
“தொடர்பு கிடைக்கலே. அவன் குடும்பத்தப் 
பார்க்கணுமில்ல. புள்ளங்க இருக்கு… வேலை கடினம்… வந்து என்ன பண்ணப்போறான்? அழுதா  கோதை திரும்பி வந்துடப்போறாளா என்ன?  உலகம் என்ன வேகத்துல போய்க்
கிட்டிருக்கு… புள்ள அப்படி நினைச்சிருப்பான்” என்றார். அப்போதுதான் அவரின் வேதனை உள்ளுக்குள்ளிருந்து துளிராக எட்டிப் பார்த்தது.
சிலர் அவர் பிள்ளையைக் குறைபேசினார்கள்.
நாகராஜன் பேசாமல் இருந்தான்.
“மனசத் தேத்திக்கங்க” என்றார் ஒருவர்.
எல்லோரும் போய்விட்டார்கள். ஒருசில உறவுகள் மட்டும் இருந்தார்கள்.
தனிமையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்த கணேசமூர்த்தியிடம் போனான் நாகராஜன்.
“நாளைக்குத்தானே சார் பால்தெளியல்?”
“ஆமாம் தம்பி. பத்தாம் நாள் கருமாதி வச்சுடலாம். நானும் வேலைக்குப் போகணும்” என்றார்.
“என்னது வேலைக்கா? என்ன வேலை சார்?”
“ஆமாம்பா… கோதையோட முடிவு தெரிஞ்ச 
முடிவுதான். இருந்தாலும் என்னோட அவ வாழ்ந்த வாழ்க்கை என்னிக்கும் மறக்க முடி
யாது. கையில உள்ள பணம் எல்லாம் போயி கொஞ்சம் கடன் ஆயிடிச்சு. இது அவளுக்கான மரணக் கடன். அதுக்குத்தான் முன்கூட்டியே கேட்டு வச்சிருந்தேன். பிரைவேட் கம்பெனில மேனேஜர் வேலை. பென்ஷனும் அதுவும் இருந்தா சீக்கிரம் கடனை அடைச்சுடலாம். அடைச்சுட்டா வந்துடுவேன். அதுக்கப்புறம் பென்ஷன் போதும். அதுவரைக்கும் பொழுது போயிடும். அவளுக்காக உழைக்கறதுன்னாவே மகிழ்ச்சியா இருக்கு தம்பி.  அவளோட வாழற மாதிரியே இருக்கும்.”

x