நினைவு இல்லமாகிறதா கோவையில் கருணாநிதி வசித்த குருவிக்கூடு வீடு?


நினைவு இல்லமாகிறதா கோவையில் கருணாநிதி வசித்த குருவிக்கூடு வீடு?

திமுக தலைவர் கருணாநிதி பிறந்த திருக்குவளை வீடு நூலகமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. அவர் இருந்து அரசியல் செய்த கோபாலபுரம் இல்லத்தையும் தனது மனைவிக்குப் பிறகு மருத்துவமனையாக மாற்ற வேண்டும் எனக் கருணாநிதியே எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறார். இந்தச் சூழலில், கருணாநிதி கதை வசனம் எழுதியபோது கோவையில் தங்கியிருந்த அவரது நண்பர் அண்ணாசாமியின் வீட்டையும் நினைவு இல்லமாக்க வேண்டும் என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். தனது ‘நெஞ்சுக்கு நீதி’ நூலிலும் பல மேடைகளிலும் இந்தக் குருவிக்கூடு வீட்டைப் பற்றி எழுதியும் பேசியும் இருக்கிறார் கருணாநிதி. இந்த நிலையில், சமீபத்தில் சுமார் 200 பேருடன் அந்த வீட்டுக்குச் சென்ற கோவை மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்தி எம்.எல்.ஏ., அங்கே கருணாநிதியின் படத்தை வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு, அந்த வீட்டை கருணாநிதியின் நினைவு இல்லமாக மாற்ற இருப்பதாகவும் ஒரு உபரித் தகவலை உதிர்த்துச் சென்றிருக்கிறார். இதனால், இப்போது அந்த வீட்டில் வசிக்கும் அண்ணாசாமியின் மகன் ஒருவித கலக்கத்தில் இருக்கிறார். “இப்போது எங்களுக்குன்னு இந்த வீட்டைத் தவிர வேறெதுவும் இல்லை. பொருளாதார வசதியும் பெருசா இல்லை. கலைஞர் வாழ்ந்த இந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்குறோம்னு சொல்றவங்க, இந்த வீட்டுக்கான விலையைத் தர்றோம்னு சொன்னா யோசிக்கலாம். அதைவிட்டுட்டு, வீட்டை சும்மா குடுங்கன்னா... இருக்கிற வீட்டையும் குடுத்துட்டு நாங்க எங்க போய் நிப்போம்” என்கிறார் அண்ணா சாமியின் மகன்! உரிய மதிப்பைக் கொடுத்து அந்த வீட்டை வாங்குவதற்கு திமுக-வில் வசதியா இல்லை?!

இப்படியும் ஒரு மனிதர்!

அந்த இரவு நேரத்திலும் கேரளத்துக்கான நிவாரணப் பொருட்களை நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் கொண்டு வந்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள் மக்கள். அப்போது, ஒரு வாடகை ஆட்டோ நிறைய, தனது தோட்டத்தில் விளைந்த ஒரு டன் மரவள்ளிக் கிழங்கை ஏற்றிக்கொண்டு வந்தார் துவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செண்பகசேகரன். “ஏன் இந்த இரவு நேரத்துல கொண்டு வர்றீங்க..?” என்று பலரும் அவரைக் கேட்டதற்கு, “பகலில் வந்தால் நாலு பேருக்குத் தெரியும், அதான் இப்போ கொண்டு வந்தேன்” என்று சொல்லியிருக்கிறார். அவர் கொண்டுவந்த மரவள்ளிக் கிழங்குகளின் மதிப்பு ரூ. 25 ஆயிரம். இதற்கு முன்பாகக் கடந்த சுதந்திர தினத்தன்றுதான் குமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், இவருக்கு ‘சிறந்த விவசாயி’ என்ற பட்டமும், ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. நூறு ரூபாய்க்கு உதவிசெய்துவிட்டு ஆயிரம் ரூபாய்க்கு விளம்பர வெளிச்சம் போட்டுக்கொள்பவர்கள் மத்தியில் இப்படியும் ஒரு மனிதர்!

x