பாலியல் புகாரில் கைதான கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியரின் ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு 


சென்னை: பாலியல் புகாரில் கைதான கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் மே 22-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 1995-2001 காலகட்டத்தில் படித்த, வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவி ஒருவர், முன்னாள் பேராசிரியரான ஸ்ரீஜித் கிருஷ்ணா தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்ததாக போலீஸில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து புகார் அளித்த அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி, தொடர்ந்து ஸ்ரீஜித் கிருஷ்ணாவை கடந்த ஏப்.22-ல் கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஸ்ரீஜித் கிருஷ்ணா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு விடுமுறைகால அமர்வில் நீதிபதி ஆர்.சக்திவேல் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரின் பேரில்போலீஸார் கைதும் செய்துள்ளனர். அந்த பெண் தற்போது இந்தியாவிலேயே இல்லை. மேலும், அவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்துக்கும் மனுதாரரை குறை கூறி புகார் அளித்துள்ளார். இதுபோன்ற புகார்களை ஏற்றால், உள் நோக்கத்துடன் யார்வேண்டுமென்றாலும், யாருக்கு எதிராகவும் பாலியல் புகார் அளிக்கமுடியும்.

எனவே, மனுதாரருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என வாதிட்டார். அப்போது பாதிக்கப்பட்ட பெண் சார்பில், இந்த விவகாரத்தில் தன்னைப்போல பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். புகாரில் உண்மை இருப்பதால்தான் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மனுதாரரான ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கினால், பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் புகார் அளிக்க முன்வரமாட்டார்கள். மேலும், ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்த்து மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதைஅனுமதித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.