உதிரும் தலைமுடி


நான் ‘இந்து தமிழ் திசை’யிலும், ‘காமதேனு’விலும் மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்த பிறகு, வாசகர்களிடமிருந்து ஆரோக்கியம் குறித்த சந்தேகங்கள் என் மின்னஞ்சலுக்கு வருவது அதிகரித்துவருகிறது. எல்லா அஞ்சல்களுக்கும் என்னால் பதில் சொல்ல முடிவதில்லை. எனவே, அவசர - அவசியத் தகவல்களுக்கு மட்டும் பதில் அனுப்புவேன். அப்படி இதுவரை வந்த அஞ்சல் குவியலைத் தட்டிப் பார்த்ததில், மூன்று கேள்விகள் மட்டும் அடிக்கடி கேட்கப்பட்டுள்ளதாக என்னுடைய ஜிமெயில் இன்பாக்ஸ் தகவல் தருகிறது.

அது என்ன கேள்விகள்?

‘உதிரும் தலைமுடிக்கு என்ன தீர்வு? ’ ‘கருமையாகக் கூந்தல் வளர என்ன மருந்து? ’ ‘இளநரை மறைய என்ன வழி? ’
இந்தக் கேள்விகளை அனுப்பியது யார் என்கிறீர்கள்? 20 – 30 வயதுள்ள யுவன்களும் யுவதிகளும்! “டாக்டர்! வழுக்கைப் பிரச்சினையால், எனக்குத் திருமணமாவது தள்ளிப் போகிறது! எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது...” “என் கூந்தல் குட்டை என்பதால், என் மேல் காதல் கொள்வாரில்லை! முதிர்கன்னியாகவே இருக்கிறேன்...” “தலைக்குக் குளிக்கும்போதும் சீவும்போதும் தலைமுடி கொட்டி, கைப்பை நிரம்பி விடுகிறது. இதனால் எனக்குத் தன்னம்பிக்கையே தகர்ந்துவிடுகிறது...” இப்படிப்பட்ட புலம்பல்களும் ஏராளம் உண்டு.

இது சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம். சங்க காலத்தில் ஆண்மையின் அடையாளமாகவும், பெண்மையின் அழகு என்றும் பார்க்கப்பட்டது தலைமுடி. இன்றைக்கு இளம் வயதினரின் உளவியல் சிக்கலுக்கும், உறவுச் சிக்கலுக்கும் உள்ளாகி, “திருமணமாகி வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்க முடியாதோ?’ என்னும் கவலையையும் கலவரத்தையும் உண்டுபண்ணும் அளவுக்கு அது ஒரு வாழ்க்கைப் பிரச்சினையாக உருமாறியிருக்கிறது. என்ன காரணம்?

x