சில நாட்களாக தினமும் கேள்விகளால் துளைத்த அலைபேசிக்கு அன்று அப்படியான அழைப்புகள் எதுவும் வரவில்லை. கருணாநிதியின் கடைசி நிமிடங்களை மக்களாகவே உணர்ந்துகொண்டுவிட்டனர் போலிருக்கிறது. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 4 மணிக்கே அதற்கான அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கின. அத்தனை பேரிடமும் சோகம்... இறுக்கம். அதற்கும் மேலாகப் பதற்றம். மாலை 5.30 மணிக்கு காவிரி மருத்துவ மனையை விட்டு கருணாநிதியின் வீட்டுப் பெண்கள் கதறிக்கொண்டே வெளியேற... ‘இனி அவர் இல்லை’ என்பதைக் தமிழகம் உணர்ந்துகொண்டது. தங்கள் வாழ்நாளில் சந்தித்திராத பிரிவுத் துயரம் பீறிட்டு எழ, தொண்டர்கள் ஆங்காங்கே வெடித்து அழுதார்கள். மருத்துவமனைக்கு மேலே பேருந்தை ஓரங்கட்டிய அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் ஒருவர் ஸ்டீடியரிங்கில் தலையில் முட்டி முட்டி அழுததைப் பார்த்து மொத்தப் பேருந்தும் திகைத்தது!
மாலை 6.40 மணிக்கு கருணாநிதியின் மறைவுச் செய்தி அதிகாரபூர்வமாக வர, தமிழகத்தைப் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது. கடைகள்அடைக்கப்பட்டன. சென்னையில் பரபரப்புடன் நகரத் தொடங்கிய மக்களை மழையும் சேர்ந்து துரத்தியது. ‘மெரினாவில் கருணாநிதிக்கு இடம் இல்லை’ என்று வந்த அறிவிப்பு, பதற்றத் தீயை மேலும்கூட்டியது. தொண்டர்களை அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டே இருந்தார் ஸ்டாலின். இதனால், எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. இரவு ஒரு மணிக்கு கோபாலபுரம் இல்லத்திலும் அதன் பின்பு சி.ஐ.டி.காலனி இல்லத்திலும் வைக்கப்பட்ட கருணாநிதியின் உடலுக்கு மக்கள் சாரை சாரையாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
மறுநாள் 8-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ராஜாஜி அரங்கத்துக்கு வந்தடைந்தது கருணாநிதியின் உடல். அசம்பாவிதங்களுக்குப் பயந்து மாநகரப் போக்குவரத்தை முடக்கியிருந்தது அரசு. ரயில்களிலும் வேன்களிலும் அதிகாலையிலேயே சென்னையை முற்றுகையிடத் தொடங்கினார்கள் தொண்டர்கள். புறநகர் ரயிலில் பயணித்தவர்களில் கருணாநிதியைப் பார்க்க வந்த கூட்டமே அதிகம். குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் குழுவாக ஏறிய திருநங்கைகள், “எங்களுக்கு பேரு வெச்ச பெரியய்யா போயிட்டீயே... எங்களை கவுரவமாகூப்பிட வெச்ச பெரியய்யா போயிட்டீயே...” என்று பெருங்குரலெடுத்து அழுதபடியே வந்தார்கள். வழக்கமாக வந்து காசு கேட்பவர்கள், அன்றைக்குத் தானாகவந்து காசு கொடுத்தவர்களிடம்கூட வாங்கவில்லை. வெறித்துப் பார்த்து அழுதபடியே வந்தார்கள்.
அர்ச்சகர் தோற்றத்தில் இருந்த பெரியவர் ஒருவர், “உடம்புக்கு முடியலைன்னாலும் நம்ம வீட்டுல ஒரு பெரிய மனுஷா படுத்திருந்தாலே அதுவே நமக்கு பெரிய பலமாக இருக்கும். பெரிய பாதுகாப்பு உணர்வும் கிடைக்கும். கலைஞர் விஷயத்துலயும் அப்படித்தான். இப்போ நாமெல்லாம் அனாதையாகிட்டோம்...” என்று அரற்றினார். அதைக் கேட்ட அருகிலிருந்தவர், “தலைவருக்கு உடம்பு முடியலைன்னு கேள்விப்பட்டு ஒரு வாரம் முன்னாடியே சென்னைக்குக் கிளம்பிட்டேன். சரக்குக் கப்பல்ல வேலை. லீவு தர முடியாதுன்னாங்க... போங்கடா உங்க வேலையே வேண்டாம்னு வந்துட்டேன். அப்பாவோட முகத்தை ஒரு தடவையாச்சும் பார்த்துடணும்...” என்றார்.