பால் கிடையாது... குழந்தை வளர்கிறது..!- கஷ்டத்தில் கலைஞர் எழுதிய கடிதங்கள்


உடன்பிறப்புகளுக்கு கடிதம் வாயிலாக தனது எண்ணங்களைக் கொண்டு போய்ச் சேர்ப்பது கருணாநிதிக்கே உரிய தனிச்சிறப்பு. அப்படிப்பட்டவர் தனது ஆரம்ப நாட்களில் தனது நண்பர்களுக்கு எப்படியெல்லாம் கடிதங்கள் எழுதியிருப்பார்? அப்படி 1946-1948 காலகட்டங்களில் அவர் எழுதிய கடிதங்கள் சிலவற்றை அவரது நண்பர் கோவை அண்ணாசாமியின் மகன் மணி பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறார்.

இக்கடிதங்கள் எல்லாமே கருணாநிதி, தன் கைப்பட அண்ணாசாமிக்கு எழுதியவை. மாறன்-மல்லிகா, ஸ்டாலின்-துர்கா ஆகியோரின் திருமண அழைப்பிதழ்களையும் தனது கைப்படவே விலாசமிட்டு அனுப்பியிருக்கிறார் கருணாநிதி. கோவையில் தங்கியிருந்து கதை வசனம் எழுதிய நாட்களில் எழுத்தாளரான அண்ணாசாமியின் வீட்டில்தான் வாடகைக்குக் குடியிருந்தார் கருணாநிதி. அந்த அனுபவத்தைக் குருவிக்கூடு என்ற தலைப்பில் தனது நெஞ்சுக்கு நீதி நூலில் அவர் எழுதியிருக்கிறார். இந்த வீட்டில் இருந்தபோதுதான் எம்.ஜி.ஆரைச் சந்தித்தார் கருணாநிதி. சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த வீட்டில் அவர் இருந்தார். அந்தச் சமயத்தில், குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுமளவுக்கு அண்ணாசாமிக்கும் கருணாநிதிக்கும் நெருக்கம் இருந்தது. அப்போது நண்பர் கருணாநிதி தனக்கு எழுதிய கடிதங்களைத்தான் தனது மகன் மணியிடம் பொக்கிஷமாகத் தந்துவிட்டுப் போயிருக்கிறார் அண்ணாசாமி.

இந்தக் கடிதங்களை நம்மிடம் காட்டிப் பேசிய மணி, “கருணாநிதியோட முதல் மனைவி பத்மாவதி அம்மா அனுபவிச்ச வறுமை, கொடுமையை யாருமே அனுபவிச்சிருக்க முடியாதுன்னு எங்க அப்பாவும் அம்மாவும் நான் சிறுபிள்ளையா இருக்கும் போதே என்கிட்ட கதை கதையா சொல்லிருக்காங்க. ஆரம்பத்தில் சொந்த வாழ்க்கையில் கலைஞர் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொன்னா கரையாத நெஞ்சும் கரையும். இதோ இந்த கடிதத்துல ‘பால் கிடையாது. குழந்தை வளர்கிறது!’ ன்னு எழுதியிருக்கார் பாருங்க. அப்போது பத்மாவதி அம்மாள் உடலுக்கு சுகவீனமற்று ஊரில் மரணப் படுக்கையில் இருந்திருக்கிறார்.

இன்னொரு கடிதம் பாருங்க ஒரு நாடக ஸ்கிரிப்ட்டை ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பவும், செலவை ஏத்துக்கறதாவும் சொல்றார். இன்னொரு கடிதத்தில் என் அப்பா, கலைஞரின் அம்மா பற்றி விபரீதமா கனவு கண்டதாக எழுதுகிறார். உடனே, ‘நீங்கள் கனவு கண்ட நேரத்தில் இங்கு அம்மாவுக்கும் உடல்நிலை ஆபத்தாகி இப்போது குணம்!’ என பதில் எழுதுகிறார் கலைஞர். ரெண்டு பேருமே பகுத்தறிவுவாதிகளா இருந்தும் கடிதத்தில் எப்படிக் கருத்துப் பரிமாற்றம் நடந்திருக்குன்னு பாருங்க. 
இன்னும் நிறைய கடிதங்களை வச்சிருந்தேன். அதையெல்லாம் யார் யாரோ வாங்கிட்டு போயிட்டாங்க. மிஞ்சி இருக்கறது இதுமட்டும்தான்” என்றார்.

x