சர்வம் குக்கர் மயம்!
ஆர்.கே.நகர் டோக்கன் விவகாரத்துக்கே விடை தெரியாத நிலையில், சொந்த ஊரான மன்னார்குடியில், “ஆளுக்கொரு குக்கராம்... அப்படியே வந்துரணுமாம்...” என்று சொல்லி டோக்கன் கொடுத்துக் கூட்டம் கூட்டியிருக்கிறது தினகரன் அணி. ஊர் உலகமே சுற்றும் மக்கள் செல்வர் தினகரனை மன்னார்குடிக்குள் வரவிடாமல் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார் அவரது அன்பு (!) மாமா திவாகரன். மாமாவும் மாப்பிள்ளையும் அறிக்கை வழியாக அக்கப்போர் தொடங்கிய பிறகு, இரண்டு முறை மன்னார்குடியில் கூட்டம் போட முயன்றார் தினகரன். ஆனால், அது முடியவில்லை. கடைசியில், நீதிமன்ற உத்தரவு பெற்று, கடந்த 5-ம் தேதி மன்னார்குடியில் மேடை ஏறினார் தினகரன். தடைகளைக் கடந்து நடக்கும் கூட்டத்தை தடபுடலாக நடத்த வேண்டாமா...
அதற்காகத் தான் ‘குக்கர்- டோக்கன் - அழைப்பு’. மைக்கில் பேசிய அனைவருமே தினகரனை முதல்வர் லெவலுக்குப் பேசினார்கள். உள்ளூரில் வைத்து உசுப்பேற்றுகிறார்கள் என்று தெரிந்தே அவரும் நெஞ்சை நிமிர்த்தி உட்கார்ந்திருந்தார். குக்கரைத் தவிர வேறு சிலவற்றுக்கும் டோக்கன் கொடுத்திருப்பார்களோ என்னவோ... மலர் கிரீடம், வீரவாள் பரிசு, புறா விடு தூது என தினுசு தினுசாய் தினகரனை திக்குமுக்காட வைத்தார்கள். “அம்மாவுக்கு கார் ஓட்டிய அய்யப்பனை சின்னம்மா எனக்கு டிரைவராக அனுப்பியதற்கு எதாவது காரணம் இருக்கும்” என்று சொன்ன தினகரன், “திருப்பரங்குன்றத்தில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் (டோக்கன் ரெடியாகிருச்சு போலிருக்கப்போய்!) நம்ம வெற்றி பெறுவோம். நாடாளுமன்றத் தேர்தலில் 40, சட்டமன்றத் தேர்தலில் 200” என அரித்மெட்டிக் கணக்குகளையும் அள்ளிவிட்டு அமமுக-வினரை குஷிப்படுத்தினார். (பிகு: கூட்டம் முடிந்த சூட்டோடு டோக்கன்கள் எல்லாம் குக்கர்களாக மாறிவிட்ட தாகத் தகவல். பின்ன, உள்ளூர்ல... உதைப்பாங்கல்ல..!)
பாஜக களமிறக்கும் வாட்ஸ் - அப் வாரியர்ஸ்!