கணேச மாமாவின் கல்யாணச் செலவுகள்- ஏக்நாத்


வீட்டுக்கு வெளியில் பைக்கில் நின்று ஹார்ன் அடித்தார் கணேசன். யாரும் எட்டிப்பார்க்கவில்லை. வழக்கமாக, இந்தச் சத்தம் கேட்டதும் மருமகன் சுடலை தலையை நீட்டி, ‘வாரேன்’ என்று சத்தம் கொடுப்பான். இன்று  இல்லை போலிருக்கிறது.

இடதுபக்கம் நிற்கிற முருங்கை மரத்தில் பூக்கள் பூத்திருக்கின்றன. மரத்தை லேசாக உலுப்பினால்கூட அந்த வெண்ணிறப் பூக்கள் உதிர்ந்து கொட்டுவது அழகாக இருக்கும். இந்த மரத்தின் காய்களுக்கு மட்டும் அப்படியொரு ருசி. வடக்கு அக்ரஹாரத்து காசி சார்வாள், இந்த மரத்துகாய்க்கு அடிமையாகி, அடிக்கடி கேட்டு வாங்கிப் போவார். இப்போதும் வாங்குகிறாரா என்பது தெரியாது.

கதவு திறந்துகிடக்கும் வீட்டின் உள்ளே பார்த்தவாறு மீண்டும் ஹார்ன் அடித்தார், கணேசன். இப்போதும் யாரும் எட்டிப்பார்க்கவில்லை. வீட்டின் பின்பக்கம் ஏதோ செய்துகொண்டிருப்பார்கள் என்று முடிவு செய்துகொண்ட கணேசன், சிறிது நேரம் காத்திருக்க நினைத்தார்.

பைக்கின் கண்ணாடியில் முகத்தைப் பார்த்து மீசையைத் தடவி விட்டுக்கொண்டார். காற்று ஜில்லென வீசிக்கொண்டிருந்தது.

x