தாம்பரம்: தாம்பரம் அருகே சேலையூர் பல்பேடு பகுதியில் ஹார்டுவேர்ஸ் மற்றும் எலெக்ட்ரிக்கல் கடை ஒன்றில் மின் கசிவு ஏற்பட்டு, தீப்பிடித்து பல லட்சம் பொருட்கள் நாசமானது.
தாம்பரம் அடுத்த சேலையூர் மப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கைலாஷ் ராம். இவர் மப்பேடு சந்திப்பு பகுதியில் ஹார்டுவேர்ஸ் மற்றும் எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் வழக்கம் போல வியாபாரம் முடித்த பின்னர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில் இன்று அதிகாலை சுமார் 1:25 மணி அளவில் கடையில் தீ விபத்து ஏற்பட்டு கடையின் உள்ளே இருந்த பெயின்ட், எலெக்ட்ரானிக் மற்றும் மின்சார ஒயர்கள் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் முழுவதுமாக எரியத் தொடங்கியது.
பின்னர் இந்தத் தீ அருகில் இருந்த முருகன் என்பவருக்கு சொந்தமான பேக்கரிலும் பரவி இரண்டு கடைகளும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலையம் மற்றும் தாம்பரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த தீ அணைப்பு படை வீரர்கள் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் கடையில் உள்ள பொருட்களை வெளியே அகற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகை மப்பேடு, மாடம்பாக்கம், பதுவஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழுவதும் பரவியதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், அதிக மின்னழுத்தம் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதில் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சம்பலாகி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.