அனைத்து மெமு ரயில்களிலும் தலா 4 கழிப்பறை வசதிகள்: ரயில்வே அதிகாரிகள் தகவல்


சென்னை: அனைத்து மெமு வகை ரயில்களிலும் ஜூன் மாதம் முதல் தலா 4 கழிப்பறை வசதிகள் அமைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை ரயில்வே கோட்டத்தின் கீழ், சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு மார்க்கம், சென்ட்ரல் - கும்மிடிப் பூண்டி மற்றும் திருவள்ளூர் மார்க்கம் உள்பட பல்வேறு மார்க்கங்களில் தினசரி 450-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர, காட்பாடி - அரக்கோணம், சென்னை கடற்கரை - மேல்மருவத்துார், திருத்தணி - சென்ட்ரல், பித்ரகுண்டா - சென்ட்ரல் உட்பட பல்வேறு தடங்களில் 12-க்கும் மேற்பட்ட மெமு வகை ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இவை அனைத்து குறுகிய மின்தொடர் பயணிகள் ரயில்களாக இயக்கப் படுகின்றன. இதில், கழிப்பறை வசதி இருக்கிறது. ஆனால், போதிய அளவில் கழிப்பறை வசதி இல்லாமலும், பெரும்பாலான நேரங்களில் தூய்மை இன்றி துர்நாற்றம் வீசுவதாகவும் பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

4 கழிப்பறை வசதி: இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "தெற்கு ரயில்வேயில் மொத்தம் 12 மெமு வகை ரயில்கள் இயக்கப்படுகின்றன. 9 மெமு ரயில்களில் தலா நான்கு கழிப்பறை வசதியும், 3 மெமு ரயில்களில் தலா இரண்டு கழிப்பறை வசதியும் உள்ளது. இவற்றில் கூடுதலாக நான்கு கழிப்பறை வசதி அமைக்கப்பட உள்ளது. ஜூன் மாதம் முதல் அனைத்து மெமு வகை ரயில்களிலும் தலா 4 கழிப்பறை வசதிகள் அமைக்கப்படும்" என்றனர்.

கூடுதல் கழிப்பறை வசதி தேவை: இது குறித்து ரயில் பயணிகள் கூறுகையில், "8 பெட்டிகள் கொண்ட மெமு ரயிலில் மொத்தம் 4 கழிவறைகள் தான் அமைக்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு பெட்டியிலும் குறைந்தபட்சம் 2 கழிவறை வசதிகளை வழங்க வேண்டும். சாதாரண பாசஞ்சர் ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் 4 கழிவறைகள் உள்ளன. அதேபோல, மெமு ரயிலிலும் ஒவ்வொரு பெட்டியிலும் போதிய கழிவறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்" என்றனர்.