உயரழுத்த மின் கம்பியில் உரசிய யானை உயிரிழப்பு @ தேன்கனிக்கோட்டை


ஜவளகிரி அருகே பாலதொட்டனப்பள்ளியில் தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசியதில் ஆண் யானை உயிரிழந்தது.

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனச் சரகத்திற்கு உட்பட்ட பனைகாப்பு காட்டில் இருந்து வெளியேறிய, சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மின்சார கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

பனைகாப்பு காட்டில் இருந்து வெளியேறிய அந்த யானை இன்று பாலதொட்டனப் பள்ளியிலிருந்து சாவரபெட்டா செல்லும் சாலை அருகே லோகேஷ் என்பவரது பசுமை குடில் அருகே சென்றது. அப்போது தாழ்வாகச் சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது உரசியதில் யானை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானையின் உடலை மீட்டு உடற்கூறாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்தப் பகுதிகளில் பெரும்பாலும் உயர் அழுத்த மின்சார கம்பிகள் அறுந்து தொங்குவதுடன் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டிருப்பதால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதாகக் கூறும் அப்பகுதி பொதுமக்கள், இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மின் கம்பியில் உரசி யானை பலியானது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x