கழுத்தில் வலி வந்தால் மாரடைபபா?


அந்தத் தொழிலதிபருக்கு 50 வயது. வெளியூர்களுக்கு அடிக்கடி காரில் பயணம் செய்வார். டிரைவர் இருந்தால்கூடப் பாதி தூரம் அவரும் கார் ஓட்டுவார். அதில் ஒரு சுகம் அவருக்கு! ஒருநாள் காலையில் அவர் எழுந்திருக்கும்போது கழுத்தைத் திருப்ப முடியவில்லை. வலி கொன்றது. அவர் அதை ‘சுளுக்கு’ என நினைத்துக்கொண்டார்; தைலங்களைத் தடவினார்; களிம்புகளைப் பூசினார்; தலையணையை மாற்றினார்; எண்ணெய் மசாஜ் செய்தார். எதிலும் பலனில்லை.

என்னிடம் வந்தார். எக்ஸ்-ரேயில் எலும்புத்தேய்மானம் தெரிந்தது. வழக்கமான வலிக்கொல்லிகளுடன் ‘டிராக்ஷன்’ போட்டுக்கொள்ளச் சொன்னேன். வலி விடைபெற்றது. அதற்குப் பிறகு அவர் சிகிச்சைக்கு வரவில்லை. ஆனால், அவருக்குக் கழுத்துவலி அவ்வப்போது வருவதாகவும், அப்போதெல்லாம் வீட்டில் அவராகவே டிராக்ஷன் போட்டுக்கொள்வதாகவும் பொது நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தபோது சொன்னார்.

அடுத்த சில வாரங்களில் என்னை அலைபேசியில் அழைத்தார். “டாக்டர்! நடுராத்திரியில் இருந்தே கழுத்தில் கடுமையான வலி! காலையில் வழக்கம்போல் டிராக்ஷன் போட்டுக்கொண்டேன். ஆனாலும், வலி விட்டபாடில்லை. என்ன செய்யலாம்?” என்று கேட்டார். “உடனே மருத்துவமனைக்குக் கிளம்பி வாருங்கள்” என்றேன்.
அரை மணி நேரம் கழித்து, அவருடைய டிரைவர் அலைபேசினார். “டாக்டர்! உங்கள் மருத்துவமனைக்கு வந்துகொண்டிருந்தபோதே முதலாளிக்கு வலி அதிகமாகி, மயங்கிவிட்டார். அதனால் வழியில் உள்ள ‘பெரிய’ மருத்துவமனையில் அவரைச் சேர்த்துவிட்டேன். இப்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்…” என்று அதிர்ச்சியான தகவலைச் சொன்னார்.

விசாரித்ததில், அன்றைக்குத் தொழிலதிபருக்கு வந்தது வழக்கமான கழுத்துவலி இல்லை. இந்த முறை அந்த வலி இடது கைக்கும் சென்றிருக்கிறது. அது இதய வலி; மாரடைப்புக்கான அறிகுறி. உடனே கவனிக்க வேண்டும். இதை அறியாமல், அவர் டிராக்ஷனில் ஈடுபட்டதால் நிலைமை கைமீறிவிட்டது; மாரடைப்பு மோசமாகி, மரணத்தின் விளிம்புக்கே சென்றுவிட்டார். அதற்குப் பிறகு வீட்டில் உள்ளவர்கள் அவரை ஆம்புலன்ஸில் மதுரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே பிரபல மருத்துவமனையில் இரண்டு வாரம் ‘ஐசிசியூ’வில் தங்கி, இரண்டு ‘ஸ்டென்டு’கள் வைத்த பிறகு உயிர் பிழைத்தார்.

x