தான் தங்கியிருக்கும் ஹோட்டலின் கீழ்த்தளத்தில் நடிகை சுஷ்மிதா தங்கியிருக்கிற செய்தியை, தன் அதீதமான மோப்ப சக்தியால் கண்டறிந்தார் அமைச்சர் சுந்தரலிங்கம்.
அவர், எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் இங்கு யார் யாரெல்லாம் தங்கியிருக்கிறார்கள் என்பதை, தன் அனுபவத்தின் வாயிலாகக் கண்டுபிடித்துவிடும் அசாத்திய திறமை மிக்கவர். அன்றைய தினம் நட்சத்திர ஹோட்டலில் நிலவிய படபடப்பு, சுறுசுறுப்பு… இதை வைத்துப் பார்க்கையில் ஒரு நடிகர் அல்லது நடிகை இவர்களில் யாரேனும் ஒருவர்தான் தங்கியிருக்க வேண்டும் என்பதாக ஊகித்தார். அவரது ஊகத்தின் படியே திரைத்துறையைச் சார்ந்தவர்களின் நடமாட்டம் ஹோட்டலில் அதிகமாக இருந்தது. ஒரு இளைஞனைக் கூப்பிட்டுக் கேட்டார், “தம்பி, பக்கத்தில் படம் சூட்டிங் எதுவும் நடக்குதா?”
“ம்” என்றவாறு அவன் பூரித்தான்.
“ஹீரோ, ஹீரோயின்?”
“வினோத், சுஷ்மிதா.”
சுந்தரலிங்கம் இருவரையும் மனதுக்குள் ஓட
விட்டுப் பார்த்தார். சுஷ்மிதா சினிமாத் துறை
யில் உச்சத்தில் இருக்கும் நடிகை. அதை
நினைக்கையில் அவருக்குப் புளகாங்கிதமாக
இருந்தது. நேராக அவர் வரவேற்பு அறைக்குச்
சென்று தானொரு அமைச்சர் என்பதைக் காட்டிக்
கொள்ளாதவராகக் கேட்டார் “ஹீரோயின் சுஷ்மிதாவுக்கு எல்லா வசதியும் செய்து
கொடுத்திருக்கிறீங்களா?”
“ஆம், கொடுத்திருக்கோம் சார்.”
“கீழ்த்தளத்தில்தானே ரூம்?”
“ஆமாம் சார். ரூம் நம்பர் 107.”
`பலே!’ சிரித்துக்கொண்டார் சுந்தர
லிங்கம்.
அவர் அமைச்சராகிய நாட்கள் கொண்டே அவருக்கொரு கனவு இருந்து வந்தது, யாரேனும் ஒரு நடிகையுடன் நெருங்கிப் பழகி சினேகம் கொள்ள வேண்டும் என்று. அக்கனவை சுஷ்மிதா வாயிலாக நிறைவேற்றிக்கொள்ள விரும்பினார்.
அமைச்சர் தன் உதவியாளரை அழைத்துக் கீழ்த்தளத்தில் தங்கியிருக்கும் நடிகையின் பெயரைச் சொல்லி அவரை நான் சந்திக்கணும் என்றார். அதைச் சொல்லும்போது அவரது முகத்தில் வெட்கம் வழிந்தது.
“ஏற்பாடு செய்கிறேன் சார்” என்றார் உதவியாளர்.
“எப்படி?”
உதவியாளர் நெற்றியைச் சுழித்து நாசியும் கண் புருவமும் கூடுவாயில் விரல்களைக் கொடுத்து நீவி விட்டபடி “ஆம், ஒரு ஐடியா இருக்கு சார்” என்றார்.
“என்ன ஐடியா?”
“நீங்க அவங்ககிட்ட ஒரு ஆட்டோகிராஃப் வாங்கணும்...?”
அமைச்சருக்குக் கோபம் வந்தது. “நான் பச்சை மையில கையெழுத்துப் போடுறவன். என்னைப் போயி ஆட்டோகிராஃப் வாங்கச் சொல்றே?”
உதவியாளரின் ஐடியா உடைந்து சுக்குநூறானது. அவர் வெறுமனே தலையைச் சொறிந்தபடி நின்றார்.
“இப்படிச் செய்தால் என்ன?” தலையை ஒரு சிலுப்பு சிலுப்பிக்கொண்டார் அமைச்சர்.
“எப்படி சார்?”
“என்னையும், நான் பார்க்கிற இலாக்காவையும் சொல்லி நான் சந்திக்க விரும்புகிற செய்தியை அந்தப் பொண்ணுக்கிட்ட சொல்லி அழைச்சிக்கிட்டு வாயேன்...”
“ஒருவேளை மாட்டேன்னு சொல்லிட்டா, தலைக்
குனிவு உங்களுக்கில்ல, நீங்க வகிக்கிற துறைக்கு சார்.”
“எப்படிய்யா அந்தப் பொண்ணு அப்படிச் சொல்லும்? நான் அமைச்சர்ய்யா.”
“அந்தப் பொண்ணு மட்டும் என்னவாம். இன்றைக்கு அந்தப் பொண்ணு சினிமா இன்டஸ்ட்ரீல உச்சம்.”
“கலைமாமணி விருது வாங்கித்தாறேன்னு சொல்லி அழைச்சிக்கிட்டு வாய்யா.”
“அதை வாங்கிக்கொடுக்க ஆயிரம் பேரு இருக்காங்க.”
அமைச்சரால் வேறெதையும் யோசிக்க முடிய
வில்லை. பற்களால் உதடுகளை நீவி, முன் வழுக்கை
யைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டார்.
“நீங்க அந்த பொண்ணுக்கிட்ட ஆட்டோகிராஃப் வாங்க ஒரு துண்டுச்சீட்ட நீட்டுறதுல எவ்வளவு குறைஞ்சிடப்போறீங்க சார்.”
“சரி, அப்படியே செய்யலாம்...” என்றவாறு அமைச்சர் ஒரு வழிக்கு வந்தார்.
உதவியாளர் கோப்புகளை அடுக்கி ஓரிடத்தில் வைத்துவிட்டு கதவைத் திறந்துகொண்டு வெளியில் நடந்தார்.
“ஒன் மினிட் சின்னத்துரை. நான் அந்தப் பொண்ணுக்கிட்ட தனியாப் பேசணும்.”
“தனியான்னா?”
“கதவைச் சாத்திக்கிட்டு, சன்னல சாத்திக்கிட்டு அப்படியெல்லாம் இல்ல. தனியாப் பேசணும். நான் பேசிக்கிட்டு இருக்கிறது வெளியே தெரிந்தாலும் பரவாயில்ல. ஆனால், நான் பேசுறது வேற யாருக்கும் கேட்கக் கூடாது.”
அறையை விட்டு வெளியேறினார் உதவியாளர். திரும்பி வருகையில் அவரிடம் ஒரு சம்மதக் கடிதம் இருந்தது.
அமைச்சர் - சுஷ்மிதா இருவரின் சந்திப்பும் அந்த நட்சத்திர விடுதியின் விருந்தினர் அறையில் வெகு அமைதியாக நடந்துகொண்டிருந்தது.
சுஷ்மிதா ஓரளவு உடம்பை மறைக்கும்படியான உடையில் இருந்தார். உடை நீண்டிருக்க வேண்டிய இடத்தில் சற்றுக் குறுகியும், குறுக வேண்டிய இடத்தில் நீண்டுமிருந்தது. கால் மேல் கால் கிடத்திக்கொண்டு தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து நெற்றியில் விழும்
குதிரை வால் முடிகளை விரல்களால் கோதிப் பின்பக்க
மாக எடுத்துவிட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.
அமைச்சர் தன் பேச்சின் ஊடே நடிகையின் முகத்தை, கண்களை, உதட்டை, முகவாய்க் கட்டையை, கழுத்தை... என இறங்கு வரிசையில் பார்த்துக்கொண்டு வந்தார்.
திரையில் தெரிவதைப் போல அத்தனை அழகாக அவர் இருக்கவில்லை. ஆனாலும், பார்த்துக்கொண்டே இருக்கும்படியான அழகில் அவர் இருந்தார்.
“எதாவது சாப்பிடுறீங்களா?” அமைச்சர் கேட்டார்.
“என்ன சாப்பிடலாம்?”
“நீங்க சொல்லுங்க.”
“காபி சாப்பிடலாமே?”
அமைச்சர் எழுந்து “ரெண்டு காபி. நல்லா இருக்கணும். தாமதமானாலும் பரவாயில்லை” என்றார்.
அவர் காபியைத் தாமதமாக கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே அப்படிச் சொல்லியிருந்தார்.
அமைச்சர் முன்னே விடவும் நடிகையுடன் நெருங்கி உட்கார்ந்திருந்தார். அவரது மினிஸ்டர் வேட்டி நடிகையின் முழங்கால்களை மெல்ல உரசிக்கொண்டிருந்தது. பேச்சுக்கிடையில் ஒரு துண்டுச் சீட்டை எடுத்துத் தனது அலைபேசி எண்ணை எழுதி நடிகையிடம் நீட்டினார்.
“என்னது...?”
“என்னோட பர்சனல் நம்பர்.”
“எனக்குத் தாறீங்க...”
“எப்ப எந்த உதவி தேவைப்பட்டாலும் எனக்கு கால் பண்ணுங்க...”
நடிகை சிரித்தார். “தேங்க்ஸ்” என்றார்.
“ஏன் சிரிக்கிறீங்க?”
நடிகை அதற்கும் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு “மினிஸ்டர்கிட்ட இப்படியெல்லாம் உதவி கேட்க முடியுமா?”
“முடியாதுதான். ஆனா நீங்க என்கிட்ட கேட்கலாம்...”
நெற்றியில் கவிழ்ந்து கிடந்த பூனை முடிகளை நெற்றியில் தழுவி எடுத்துக் கோதிவிட்டபடி இருந்தார்.
“எனக்கொரு மிஸ்டு கால் கொடுங்க பார்க்கலாம்...”
சுஷ்மிதாவின் மிளகாய்ப் பிஞ்சு விரல்கள் அலைபேசி எண்களில் ஊர்ந்தன.
“நான், உங்ககிட்ட ஒரு நாளு முழுக்கவும் பேசிக்கிட்டே இருக்கணும் போலிருக்கு...” எனச் சொன்ன அமைச்சர் தன் கண்களால் ‘ப்ளீஸ் என்னைக் கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க...’ என்பதைப் போல பார்த்தார்.
“நைஸ்... பார்க்கலாம்.”
“உங்க வீட்ல அந்தச் சந்திப்ப வச்சிக்கலாமா?”
நடிகையால் ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை
“சொந்த வீட்லதானே இருக்குறீங்க?”
“இல்லை.”
“நான்னா உங்களுக்கொரு வீடு வாங்கித்தரட்டா?”
நடிகை பேரதிர்ச்சியில் பெரிதாக வாயைத் திறந்தார். “பரவாயில்லைங்க...” என்றவாறு எழுந்திருக்கும்போது ஆவி பறக்க காபி வந்திருந்தது.
நடிகையின் சந்திப்புக்குப் பிறகு அமைச்சரின் ஓட்டங்கள் வட்டமாயின. வட்டத்தின் மையமாக நடிகை சுஷ்மிதா இருந்தார். அமைச்சர் அடிக்கடி அலைபேசியில் துழாவுவதும், குறுஞ்செய்தி அனுப்புவதுமாக இருந்தார்.
நடிகை தன் வாயால் தன்னை வீட்டுக்கு அழைக்க எத்தகைய வார்த்தை பிரயோகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தேடி குறுஞ்செய்தி அனுப்புவதாக இருந்தார். நடிகை பதிலுக்கு “விரைவில்...” எனப் பதில் அனுப்பி அவரைச் சாந்தப்படுத்துவதாக இருந்தார்.
பார்க்கலாம், விரைவில், அடுத்த வாரம், இந்த வாரம், எனச் சொல்லிக்கொண்டுவந்த சுஷ்மிதா, ஒருநாள் ஞாயிறு தினத்தன்று மதியம் பன்னிரண்டு மணிக்குத் தன் வீட்டு முகவரியைக் கொடுத்துக் குறிப்பிட்ட நேரத்திற்குள் மிகச் சரியாக வந்துவிடுமாறு கேட்டுக்கொண்டார்.
அன்றைய தினம் அமைச்சரின் கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டது. விரல்கள் ஹார்மோனியம் வாசித்தன. குறிப்பிட்ட நேரத்துக்குத் தனியாளாக காரில் நடிகையின் வீட்டுக்குச் சென்றார்.
நடிகையின் வீடு குட்டி பங்களா அளவுக்கு இருந்தது. காரை ஓட்டிச்சென்ற அவர் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு காரிலிருந்து இறங்கி வீட்டை ஏறிட்டுப்பார்த்தார். நடிகை பால்கனியில் அள்ளி முடிந்த சிகை அலங்காரத்தோடு, பாதி உடம்பு வெளியே தெரியும்படியான சேலையில் நின்று கையை நீட்டி அமைச்சரின் வருகைக்குப் புன்னகைப்பூ காட்டினார்.
அமைச்சர் ‘நீ அங்கேயே இரு. நான் வந்துவிடுகிறேன்...’ என்பதைப் போல ஓடினார். வீட்டுக்குள் நடிகையுடன் இரண்டு பெண்கள் பவனிவந்தார்கள். அவர்களைப் பார்த்து ஒரு கும்பிடு போட்ட அமைச்சர் நடிகையைச் சற்று உரசியபடி ‘இவர்களெல்லாம் யார்’ என்பதைப் போல கண்களால் கேட்டார். நடிகை, தன் நடிக்கும் கண்களால் `இவர் என்னோட அம்மா, அவர் என் பணிப்பெண்...’ என்றார்.
மதிய உணவு தயாரானது. அவருக்கான விருந்தை நடிகையே பரிமாறினார். ‘போதும்’ என்கிற சொல்கிற வாக்கில் நடிகையின் மணிக்கட்டைத் தொடுவதும், ஒரு காலால் அவரது கணுக்கால்களை உரசுவதுமாக இருந்தார். அப்போது அவள் சிரித்த சிரிப்பும் வெட்கமும் அப்போதைக்குப் போதுமென இருந்தது. தான் நினைத்து வந்திருந்த வேலை கைகூடாதபோது இதற்கு மேலும் என்ன வேலை என்பதைப் போல அமைச்சர் அந்த பங்களாவை விட்டு வெளியேறினார்.
அமைச்சர் காரைத் திருப்பும்போது சுஷ்மிதாவை ஒரு பார்வை பார்த்தார். `என்னை நீ ஏமாற்றிவிட்டாய்...’ என்பதைப் போல அப்பார்வை இருந்தது. அவரால் காரை இலகுவாக இயக்க முடியவில்லை. இரண்டொரு திருப்பம் சென்று காரை நிறுத்தி நடிகைக்கு அழைப்பு விடுத்தார்.
“சுஷ்மிதா...”
“ம்... போயிட்டீங்களா?”
“என்ன விளையாடுறியா?”
“என்ன சொல்றீங்கனு புரியலைங்க...”
“வரச் சொன்னேனு வந்தேன். ஆனால், பங்களால யார் யாரோ இருக்காங்க....” வார்த்தைகளைத் தொண்டைக்குள் விழுங்கினார்.
“சாரிங்க, அம்மாவும் ஹெல்பரும் வெளியில கிளம்புனாங்க. பிறகு என்ன நினைச்சாங்களோ தெரியல, நாளைக்குப் போகலாம்னு இருந்திட்டாங்க. அதான்...” வார்த்தைகளைத் தொண்டைக்குள் அடைத்தார் சுஷ்மிதா.
“நான் உன்கிட்ட வெட்கத்த விட்டு ஒண்ணு கேக்குறேன். கேட்கவா?”
“ம்... கேளுங்க.”
“அடுத்த முறை வீட்டுக்கு வர்றப்ப, வீட்ல யாரும் இருக்கக் கூடாது.”
சுஷ்மிதா, “இவ்வளவுதானே...” என்றவாறு ஒரு சிரிப்பு சிரித்தார்.
“நம்பலாமா.?”
“ஷ்யூர்.”
அமைச்சர் ஆசுவாசமானார். “எப்ப வர?”
“நானே சொல்றேனே.”
அதன் பிறகு அமைச்சர் ஒரு நாளைக்குப் பத்து முறை என நடிகையுடன் தொடர்பு கொள்பவராக இருந்தார்.
இன்னொரு நாள் இரவு பன்னிரெண்டு மணிவாக்கில் சுந்தரலிங்கத்துக்குத் திடீர் அழைப்பு வந்தது. அழைத்தவர் நடிகை சுஷ்மிதாதான். அழைப்பை எடுத்துக் காதினில் வைத்துக்கொண்ட அமைச்சர் “சுஷ்மிதா வரட்டா?” என ஆவல் பொங்கக் கேட்டார்.
“ம்... வாங்க.”
அமைச்சர் துள்ளிக் குதித்தார். “வீட்ல யாரும் இல்லையே?”
“இல்ல வாங்க...”
அமைச்சர் காரை எடுத்துக்கொண்டு நடிகையின் பங்களாவை நோக்கி விரைந்தார். சுஷ்மிதா சொன்னதைப் போலவே பங்களாவில் யாரும் இல்லை; சுஷ்மிதா உள்பட! காரை விட்டு மிடுக்குடன் கீழே இறங்கிய அமைச்சர், வீடு பூட்டியிருப்பது கண்டு திகைக்கிறார். தவிப்புடன் செக்யூரிட்டியிடம் விசாரிக்கிறார். “ஸாப்... மேடம் இந்த வீட்டைக் காலிபண்ணிட்டாங்கோ. இந்த ஸ்டேட்டை விட்டே போறதா சொல்லிட்டுப் போனாங்கோ”
என்று செக்யூரிட்டி சொல்ல, தவிப்பும் துடிப்பும் தானாகவே அடங்கிப்போனது அமைச்சருக்கு!