கண்ணகியின் கதையை அதே பெயரில் முதன்முதலில் படமாக்கியது ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம். பி.யூ.சின்னப்பா கோவலனாகவும் பி.கண்ணாம்பா கண்ணகியாகவும் நடித்த அந்தப் படம் 1942-ல், வெளியானது. அதில் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஆர்.ராமச்சந்திரன் வரும் நகைச்சுவைக் காட்சிகளில் மக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இவர்கள் வராத சீரியஸான காட்சி ஒன்றுக்கும் திரையரங்கில் குபீரென்று சிரிப்பொலி எழுந்தது. 15 வயதே ஆன யூ.ஆர்.ஜீவரத்தினம், கவுந்தி அடிகளாக வேடம் ஏற்று, தன்னைவிட அதிக வயதுடைய பி.யூ.சின்னப்பா, கண்ணாம்பா இருவரையும் பார்த்து “குழந்தைகளே…” என அழைக்கும் காட்சிதான் அது! படப்பிடிப்புத் தளத்திலோ சின்னப்பாவும் கண்ணாம்பாவும் ஜீவரத்தினத்தை “குழந்தே...” என்று அன்போடு அழைத்திருக் கிறார்கள். 50 வயது முதுமை கொண்ட ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை ஏன் 15 வயதுப் பெண்ணுக்குக் கொடுத்தார்கள்!?
எட்டுக்கட்டையில் எளிதாகப் பாடும் ஜீவரத்தினத்தின் வயதுக்கு மீறிய திறமையே அதற்குக் காரணம். பின்னணிக்குரல் உத்தி பிரபலமடையாத காலத்தில், கவுந்தி அடிகளாக நான்கு பாடல்களை உச்சஸ்தாயியில் பாடி நடிக்கும் குரல்கொண்ட நடிகையைத் தேடியது ஜூபிடர் பிக்சர்ஸ். அப்போது, குரலுக்காகவே பிரபலமாகி யிருந்த ‘இசைக்குயில்’ யூ.ஆர்.ஜீவரத்தினத்தையே அவரது வயதைப் பற்றிக் கவலைப்படாமல் கவுந்தி அடிகளாக நடிக்க வைத்தது.
ஆனால், ஜீவரத்தினம் திரையில் பிரபலமானது இதற்கு முந்தைய வருடம். 1941-ல், அவர் பாடி, முதல்முறையாகக் கதாநாயகியாகவும் நடித்து வெளிவந்து வெற்றிபெற்ற ‘பக்த கௌரி' படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தது. ‘பக்த கௌரி’யில் சி.வி.வி.பந்துலு சிவனாக நடித்தார். சமய உட்பூசல், சாதிப்பற்று ஆகியவற்றைக் கடந்து சிவனையும் ஹரியையும் ஒரே கடவுளாக அனைவரும் வணங்க வேண்டும் என்பதைச் சொல்வதற்காக சிவனால் படைக்கப்பட்டவளே கௌரி. யூ.ஆர்.ஜீவரத்தினம் கௌரியாகத் தோன்றி, ‘ஏற்றுக்கொள்வீர் தேவா’ என உருகிய பாடலும் ‘தெருவில் வாராண்டி... வேலன் தேரில் வாராண்டி' என்ற துடிப்பான பாடலும் வெவ்வேறு பரிமாணங்களைத் தந்து அவரைப் ‘பாடக நட்சத்திரம்’ ஆக்கின. ‘பக்த கௌரி’யில் கதாநாயகியாகப் பாடி நடித்தபோது அவருக்கு வெறும் 14 வயதுதான்!
மாடர்ன் தியேட்டர்ஸ் கண்டுபிடித்த எண்ணற்றத் திறமைகளில் யூ.ஆர்.ஜீவரத்தினம் தலைசிறந்த கலைஞர் மட்டுமல்ல, அந்நிறுவனத்தின் ஆரம்பகாலத்து கலைஞரும்கூட! மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் சேலத்தில் ஸ்டுடியோவை அமைத்து முதல் படத்தை எடுப்பதற்கான ஆயத்தப் பணிகளில் இருந்த சமயம் அது. ஒன்பது வயதுச் சிறுமி ஒருவரை அவர்முன் கொண்டுவந்து நிறுத்தினார் ப்ளோர் மேனேஜர். ``இவள் நன்றாகப் பாடுகிறாள்” என்றார். சுந்தரம் “பாடு” என்று சொல்வதற்குமுன்பே பிசிறு தட்டாத ஸ்படிகம் போன்ற கம்பீரக் குரலில் உச்சஸ்தாயியில் பாட, வியந்து போனார் சுந்தரம். கையோடு, “இன்றுமுதல் ஐந்து ஆண்டுகளுக்கு நீ மாடர்ன் தியேட்டர்ஸின் கம்பெனி ஆர்டிஸ்ட்” என்று ஒப்பந்தம் போட்டார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த முதல் படமான ‘சதி அகல்யா’வில் முதல் பாடலைப் பாடியதோடு அதில் குழந்தை நட்சத்திரமாகவும் தோன்றினார் ஜீவரத்தினம். அதன்பிறகு அவரது நடிப்பும் குரலும் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களின் நிரந்தர சொத்தானது.