பூமிக்குள் ஒரு பெருங்கடல்!


மனிதர்கள் காலம்காலமாக எதையெதையோ தேடிவந்திருக்கிறார்கள். ஆனால், இன்று நமது தேடலின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது நீர். ஆறுகள், குளங்கள், கிணறுகள், ஊற்றுகள், ஆழ்துளைக் கிணறுகள் போன்றவற்றில் மட்டும் நீரைத் தேடும் காலம் போய்விட்டது. தற்போது பூமியைத் தாண்டி நிலவு, செவ்வாய், வியாழனின் நிலவுகள் போன்றவற்றிலும் நீரைத் தேடும் படலத்தில் இருக்கிறோம். உயிர் வாழ்க்கை தொடங்கியதற்கு மட்டுமல்ல, தொடர்வதற்கும் நீர் அடிப்படையானது என்பதால்தான் இந்த இடைவிடாத தேடல். விண்வெளியையே நீருக்காகத் துழாவினாலும் பூமியிலேயே இன்னும் அவிழ்க்கப்பட்டாத மர்ம நீர்முடிச்சுகள் இருப்பதை சமீபகாலமாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்து வருகிறார்கள். கடைசியில், கக்கத்தில் பையை வைத்துக் கொண்டு கடைத்தெருவில் தேடிய கதைதான் போல.

பூமியின் ஒட்டுமொத்த நீரில் கடல்களில் மட்டுமே 96.5 சதவீதம் இருக்கிறது. மீதி நீர், ஏரிகள், ஆறுகள், பனியாறுகள், பனிப்படலங்கள் போன்றவற்றிலும் நிலத்தடியிலும் உள்ளது. உலகின் ஒட்டுமொத்தக் கடல்களையும் ஒரே கடலாகக் கருதினால் அதைப் போல இரண்டு மூன்று மடங்கு கொள்ளளவு கொண்ட நீர் பூமியின் வெகு ஆழத்தில் இருப்பதாகத் தற்போது கண்டறிந்திருக்கிறார்கள். நீர் என்றால் நாம் நினைப்பதுபோன்று புதைந்திருக்கும் கடலாகவோ, நீர் அடுக்காகவோ இன்னும் சொல்லப்போனால் நீர் மூலக்கூறாகவோ அல்ல. நீரை உருவாக்கும் கச்சாப்பொருட்களான ஹைட்ரஜனாகவும் ஆக்ஸிஜனாகவும் கனிமங்களில் அடைபட்டுக் கிடக்கின்றன. ஆழம் என்றால் கொஞ்ச நஞ்சமல்ல, மேற்பரப்பிலிருந்து சுமார் 410 – 660 கிலோமீட்டர்.

2014-ல் பிரேசிலில் மண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் வைரக்கற்கள் போன்ற புவியின் ஆழத்திலிருந்து துப்பப்படும் கற்களைத் தேடிக்கொண்டிருந்தபோது ஆயிரக்கணக்கான கனிமக் கட்டிகள், துகள்கள் அவர்களுக்குக் கிடைத்தன. இவற்றில் கச்சாவான வைரக்கற்களும் அடக்கம். அப்படி ஒரு வைரக்கல்லை ஆய்வுசெய்து பார்த்தபோது அதனுள் ‘ரிங்வுடைட்’ என்ற படிகக் கல்லைக் கண்டறிந்தார்கள். ‘ரிங்வுடைட்’டையும் கூர்ந்து ஆய்வுசெய்து பார்த்தபோது அதன் எடையில் 1 சதவீதம் நீருக்கான கச்சாப்பொருட்கள் இருந்தன. அந்தக் கல்லைச் சூடுபடுத்தினால் அதிலிருந்து நீர் உருவாகும்.

அதுவரை ‘ரிங்வுடைட்’ எரிகற்களிலிருந்துதான் கிடைத்தது. பூமியிலிருந்து ’ரிங்வுடைட்’ கிடைப்பது அதுதான் முதன்முறை. அதுமட்டுமல்லாமல், பூமியின் மூடக அடுக்கின் (Mantle) இடைப்பகுதியிலிருந்து ஒரு பொருள் கிடைப்பதும் அதுவே முதன்முறை. தரைக்குக் கீழே 400 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட ஆழம் என்பதால் மனிதத் தொழில்நுட்பத்தால் ஊடுருவிப் பார்க்க முடியாத பகுதி அது. அந்தப் பகுதியில் என்ன இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக இயற்கையே அளித்த வரப்பிரசாதமாக ‘ரிங்வுடைட்’ கிடைத்திருக்கிறது.

x