ஏழு குட்டிகளைப் போட்டுவிட்டு எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டது அந்தத் தெரு நாய். உயர்ரகம் என்றாலும் கூட சந்தைமதிப்பை கணக்கிட்டுக் குட்டிகளைக் கவனிக்க போட்டி இருக்கும். தெரு நாய்களுக்கு..? ஆனாலும், அந்தத் தெருநாய்க் குட்டிகளையும் காப்பாற்ற நடந்த நெகிழ்ச்சியான பாசப் போராட்டம் இது!
நாகர்கோவில் அருகே பறக்கையில் எங்கள் வீடு. எங்கள் வீட்டருகே நடந்த உண்மைச் சம்பவம்தான் இது. இந்த நாய்க்குட்டிகளின் முன்னோடி ஐஸ்வர்யா. அது இறந்து 15 ஆண்டுகளாகின்றன. தெருநாய்தான் என்றாலும் எங்கள் முடுக்கில் (தெரு) அனைவருக்கும் ஐஸ்வர்யா அவ்வளவு நெருக்கம். எங்களுக்கு அடுத்த
வீட்டில் பாஞ்சாலி ஆச்சி இருந்தார். அப்போதே 95 வயதைக் கடந்த அந்த ஆச்சியின் பேரன் காபிக்கடை(ஹோட்டல்) வைத்திருந்தார். ஐஸ்வர்யாவுக்குப் பசி வந்தால், வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் ஆச்சியின் மீது தலையால் சினேகமாய் முட்டும். இதனாலேயே, காபிக்கடையின் மீதங்களை மெனக்கெட்டு கொண்டு வரச்சொல்லி ஐஸ்வர்யாவுக்குப் போடுவாள் ஆச்சி.
குணத்திலும் செயலிலும் ஜஸ்வர்யா எங்கள் முடுக்கின் செல்லப்பிள்ளை. வாழ்ந்த காலத்தில் ஒருமுறை கூட அது உரக்கக் குரைத்துக் கேட்டதில்லை. சின்னப் பிள்ளைகள் பயந்து ஓடினால் கூடவே அதுவும் ஓடும். பக்கத்தில் போய் வாலாட்டும். தலையால் கால்களை முட்டி, ‘நான் உன் கூட்டுக்காரனாக்கும்’என்பதுபோல் சேதி சொல்லும். ஒருநாள், நாய்பிடிக்க வந்தவர்கள் கண்ணில்பட்ட நாய்களை எல்லாம் ஊசி போட்டுத் தூக்கினார்கள். அந்தக் கூட்டத்தில் ஐஸ்வர்யாவும் துள்ளத், துடிக்க பரிதாபமாகப் பலியானது. அதன் வாரிசுகளே இப்போதும் எங்கள் முடுக்கில் வலம்வருகின்றன.
குட்டிகள் வதவதவென கிடந்தாலும் ஐஸ்வர்யா யாரையும் கடித்தது இல்லை. வெளியாட்கள் வரும்போது, “இந்தப் பட்டி(நாய்) கடிக்குமா..?” என்பார்கள். “நீங்களே கடிச்சாலும் திருப்பிக் கடிக்காது” என வேடிக்கையாய் சொல்லுவோம். ஐஸ்வர்யாவின் வாரிசுகளில் ஒரு பெண் நாய் இருக்கிறது. அதுபோட்ட குட்டிதான் குஷ்பு. பிறந்தபோது கொழுகொழுவென இருந்ததால், முடுக்கு மக்கள் செல்லமாகச் சூட்டிய பெயர் குஷ்பு!