இந்த இதயம் என்னுடையதல்ல..!- இரா.சாரதி


'‘எப்படி இருக்கீங்க இளைஞரே?’’
ஐம்பத்தைந்து வயதாகிய நான், டாக்டரின் அறையில் நுழைந்ததுமே டாக்டர் என்னைப் பார்த்துக் கேட்டார்.
‘‘நல்லா இருக்கேன் டாக்டர்.’’
‘‘ம்... வாங்க உட்காருங்க’’
டாக்டர் என் நாடித்துடிப்பை பரிசோதித்தார். ஸ்டெதஸ்கோப்பை என் நெஞ்சின் மீது வைத்துக் கேட்டறிந்தார். ஸ்டெதஸ்கோப்பை வைத்ததுமே நான் ஒரு ரயில் இன்ஜின் போல ‘ புஸ்புஸ்’ என மூச்சை நன்றாக இழுத்து உள்வாங்கி வெளியே விட ஆரம்பித்தேன்.
‘‘வெரிகுட் யங் சாப்’’ என்றவாறு டேபிள் மீதிருந்த எனது ஈ.சி.ஜி., செஸ்ட் எக்ஸ்-ரே முதலான எனது உடம்பின் பிரதிபலிப்புகளைப் பார்த்துவிட்டுக் கண்கள் பிரகாசித்தார்.
‘‘யூ ஆர் ஃபர்பெக்ட்லி நார்மல். வேற அசெளகரியங்கள் ஏதாவது?’’
‘‘இல்லை டாக்டர்.’’
‘‘நல்லது... இனி கொஞ்சநாள் கழிச்சு உங்க பேரக் குழந்தைகளோட ஃபுட் பால் விளையாடுங்க.’’
“ஐயோ, டாக்டர் எனக்குக் குழந்தைகள் இல்லை.’’
‘‘நோ நோ ‘ஐயோ’ங்கிற வார்த்தையே உங்களுக்கு ஆகாது. இனி, எல்லாக் குழந்தைகளுமே உங்களுக்குப் பேரக் குழந்தைகள்தான்.’’
‘‘ஓ.கே. டாக்டர்’’ நான் இதயத்திலிருந்து இதமாய்ப் புன்னகைத்தேன்.
‘‘உணர்ச்சிவசப்படுறது, பதற்றம், மன அழுத்தம் இதெல்லாம் உங்களுக்கு ஒத்துக்காது. அதுக்கேத்த மாதிரி உங்க வாழ்க்கை முறையை மாத்திக்கணும். ஃப்ரீயா இருக்கணும்.வாரத்துக்கு ஒருமுறை செக்கப்புக்கு வாங்க.’’
அவரிடம் விடைபெற்றுத் திரும்பினோம். எனது நினைவுகள் இரு வாரத்துக்கு முன்பு ஓடின.
நான் அப்போதெல்லாம் ஓடியாடி வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென்று எனது சுவாசம் குறைந்து, மூச்சு வாங்கத் தொடங்கியது. கால்கள், முட்டிகள், தொடைகள் வீங்கின. நான் முடங்கிப்போனேன். உடனே டாக்டரை அணுகினோம்.
நிலைமை சீராகவில்லை. சாதாரண டாக்டரிடமிருந்து ஸ்பெஷலிஸ்ட் டாக்டருக்கு மாறினோம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். நானும் என் மனைவியும் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டோம். அதனால், தள்ளிவைக்கப்பட்டோம். ஆபத்தில் நேசக்கரம் நீட்ட யாரும் வரவில்லை.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இரண்டாம் நாள் டாக்டர் கூறினார்.
‘‘மிஸ்டர் சந்தோஷ். உங்களுக்கு அமிலாய்டோஸிஸ் என்ற அபூர்வ நோய் வந்திருக்கு. எலும்பு மஜ்ஜையிலிருந்து அதிகமாகப் புரதம் தயாரிக்கப்பட்டு உடல் உறுப்புகளில் தங்கிவிடும். உங்களுக்கு இதயத்தில் தேங்கிக்கொண்டிருக்கிறது. இதனால் பாரம் அதிகமாகி இதயத்தின் வேலை சிரமமாகிக்கொண்டிருக்கிறது. இதற்குத் தீர்வு இல்லை என்பதுதான் உண்மை. இதய மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது. உங்க இதயத்துக்கு, ரத்த வகைக்கு ஏற்றவாறு மாற்று இதயம் கிடைக்க வேண்டும். கிடைக்கிறவரைக்கும் அவசர சிகிச்சைப் பிரிவில் இருங்கள்.’’
டாக்டர் சாதாரணமாகக் கூறிவிட்டார். ஆனால், எனக்கும் என் மனைவிக்கும் இருப்புக் கொள்ளவில்லை. மனதும் இதயத்தோடு பலவீனமடையத் தொடங்கியது. அதிர்ஷ்டவசமாக அடுத்த நாளே ஒரு 20 வயதுப் பெண் மூளைச்சாவு ஏற்பட்டு நான் இருக்கும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வந்தது. ஒரே ரத்த வகை. உடனடியாக, அப்பெண்ணின் பெற்றோரிடம் சம்மதம் பெறப்பட்டு எனக்கு இதய மாற்று அறுவைசிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டது. நான் ஒரு அக்கவுன்டன்ட். இரண்டு வருடம் வெளிநாட்டிலும் வேலை செய்துள்ளேன். பணத்துக்குக் கஷ்டப்படும் நிலை இல்லை. பணப் பரிவர்த்தனை முடிந்து அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரம்தான் ஆகிறது.
எனக்கு வீட்டில் அடைந்திருக்க முடியவில்லை. ஆனால், வெளியே பழையபடி செல்லக் கூடாது. எனவே, வேறு வழியின்றி அடைபட்டிருந்தேன். சில நாட்கள் கழித்து, எனக்கு இதயம் கொடுத்தவளின் பெற்றோரைப் பார்த்து நன்றி கூற ஆசைப்பட்டேன். அவர்களை நான் பார்த்தது இல்லை. பணப்பரிவர்த்தனை முதலியவற்றை மனைவிதான் பார்த்துக்கொண்டாள். இருப்பினும் எனக்கு அவர்களைப் பார்க்க வேண்டும் போல் இருந்ததால் அவர்களைப் பார்க்கப் போனோம்.
மிகச் சாதாரணமான வீடுதான். கால் டாக்ஸியிலிருந்து இறங்கியவுடன் எங்களுக்கு முன்னால் அங்கே ஊடகம் ஊடுருவியிருந்தது. எப்படித்தான் மோப்பம் பிடிக்கிறார்களோ? வீட்டினுள் சென்று அவர்களைச் சந்தித்தேன். உடன் ஊடகக்காரர்கள் புகைப்படமும் வீடியோவும் எடுத்த வண்ணமிருந்தனர். எனக்கு உயிர் கொடுத்தவளுக்குத் தந்தை, தாய், தங்கை என அளவான குடும்பம். கண்ணீர் மல்க அந்தத் தந்தையின் கரங்களைப் பிடித்து நன்றி கூறினேன். உடனே ஒரு பத்திரிகையாளர் ஒரு ஸ்டெதஸ்கோப்பை அவளின் தாயிடம் கொடுத்து என் நெஞ்சின் மீது வைத்து இதயத் துடிப்பைக் கேட்கச் சொன்னார். அந்தத் தாய்க்கு 45 வயதிருக்கும். அவள் சேலை கட்டிய விதத்தைப் பார்த்தால் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று தெரிந்தது. அமைதியான ஆரவாரமற்ற முகம். கண்களில் ஈரம். அந்தத் தாய் ஸ்டெதஸ்கோப்பைக் கீழே போட்டாள். பின்பு சடாரென்று என் நெஞ்சின் மீது தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துக் காதால் என் இதயத் துடிப்பை... அவள் மகளின் இதயத் துடிப்பைத் தேடினாள். கேட்டாள். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
55 வயதாகும், முன்பின் தெரியாத ஒரு ஆணின் நெஞ்சில் முகம் வைத்துக்கொள்ள, அதுவும் அத்தனை பேருக்கு மத்தியில், யாருக்கு மனம் வரும். அதுவும் ஆச்சாரமான பெண். ஆனால், பாசம், தாய்ப்பாசம்... அந்தத் தாயை அச்செயலைச் செய்ய வைத்திருக்கிறது. பல க்ளிக்குகள்.
எனக்கு என் தாயின் ஞாபகம் வந்தது. சிறு வயதில் என் தாய் எனக்கு நெஞ்சில் மூச்சு சீராக இருக்கிறதா, சளி இருக்கிறதா என்று பார்ப்பதற்காக என் நெஞ்சின் மீது காது வைத்த அந்த உணர்வைத் தந்தது. ஒரு நிமிடம் இருக்கும். அவள் சூழ்நிலையை உணர்ந்து உள்ளே ஓடிவிட்டாள். எனக்கு மிகவும் கஷ்டமாயிருந்தது. செய்வதறியாது திகைத்து நின்றேன். நான் தனியாள். குழந்தைகள் இல்லை. இன்னும் பத்துப் பதினைந்து வருடங்கள்தானே. நானல்லவா என் இதயத்தை, இறந்த பெண்ணுக்குக் கொடுத்திருக்க வேண்டும். அவளை வாழ வைத்திருக்க வேண்டும். இத்தாயின் மகள் இருபது வயதில் எத்தனை கனவுகள் மெய்ப்பட வாழ வேண்டியவள்? இப்படியா... ஐயோ இறைவா! எனக்குக் கடவுள் நம்பிக்கையில்லை. ஆனால், முதன்முறையாக இறைவனின் பெயரை என் உதடுகளில் உச்சரித்தேன். கனத்த இதயத்தோடு பேசாது வெளியே வந்தேன்.
‘மிஸ்டர் சந்தோஷ், நோ ஃபீலிங்க்ஸ். பி ஜோவியல்’ என டாக்டர் கூறியது ஞாபகத்துக்கு வந்தது. காரில் ஏறப் போனபோது ஒரு ஊடகக்காரர் மைக்கை நீட்டிக் கேட்டார், “ஸார்... நீங்க என்ன நினைக்கிறீங்க? எப்படி ஃபீல் பண்றீங்க?’’ நான் ஒன்றும் பேசாது அத்தாயின் அரவணைப்பிலிருந்து மீள முடியாதவனாய் சைகை மொழியில் ஆள்காட்டி விரலைக் காட்டி ‘மைக்கை எடு’ என்ற ரீதியில் ஆட்டினேன். அவர் புரிந்துகொண்டவராகத் தலையை ஆட்டி ஆமோதித்து விலக்கிக்கொண்டார். கார் புறப்பட்டது.
அப்போது அவ்வீட்டின் சாளரத்தில் ஒரு உருவம் என்னை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. அவ்வுருவம், என் இதயத்தைப் பெற்றெடுத்த தாய். எனக்கு இதயம் வலித்தது. நான் காரினுள் பக்கவாட்டில் திரும்பி காரின் ஜன்னலில் என்னிரு கைகளை வைத்து ஏதோ சிறு பிள்ளையாகப் பார்த்தேன். சில விநாடிகளில் அச்சாளரம் மறைந்தது.
அந்தத் தாய் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தது, சிறு வயதில் என்னை எல்.கே.ஜியில் சேர்த்துவிட்டபோது, நான் இப்படித்தான் தினந்தோறும் ஜன்னல் வழியே என் தாய் நடந்து சென்று மறையும்வரை பார்த்துக்கொண்டே இருப்பேன். அந்த ஞாபகம் வந்தது. எனக்குக் கண்ணீர் பெருகியது. உடனே என் மனைவி, என் கரத்தை மென்மையாக, பிறகு கெட்டியாகப் பிடித்தாள். இந்த ஒரு ஜீவனுக்காக நான் ஜீவித்தாக வேண்டும். அந்தத் தாயும் என் தாயும் இவளும் எனக்கு ஒன்றாகத் தெரிந்தனர். உணர்ச்சியால் வாயடைத்துப் போயிருந்தேன்.
வீட்டுக்கு வந்த பிறகு என் மனதில் அந்தத் தாயின் செய்கை சுற்றிச்சுற்றி வந்தது. அக்குடும்பத்தினரின் பிம்பங்கள் என்னைச் சுற்றிச்சுற்றி வந்தன. பாவம், எவ்வளவு ஆசையாய் வளர்த்திருப்பார்கள். அன்று தன் வீடு திரும்புவாள் என அவளின் தங்கை காத்திருந்திருப்பாளே, அவள் வேலைக்குச் சென்று சம்பாதித்துத் தனக்குத் தோள் கொடுப்பாள் என அந்தத் தந்தை எதிர்பார்த்திருப்பாரே. ஐயோ, உடனே என் காசோலைப் புத்தகத்தை எடுத்து என் வங்கிக் கணக்கின் இருப்பைக் கணக்கிட்டு யோசித்து ஒரு லட்சம் என எழுதினேன். ‘‘அந்தக் குடும்பத்துக்கு இதைக் குடுத்துருப்பா’’ என் மனைவியிடம் கூறினேன்.
மறுநாள் அப்பெண்ணின் தந்தையை வரவழைத்தோம். என்னைப் பார்த்ததும் கைகூப்பினார்.
‘‘நமஸ்காரம்.’’
நான் பதிலுக்கு எழுந்தாலும் என் நா எழவில்லை. சைகையில் ‘உட்காருங்க’ என்றேன்.
‘‘என் பொண்ணு அப்பத்தான் காலேஜை முடிச்சா. முடிச்சதும் வேலைக்குப் போனா. சரி வேலைக்குப் போறாளேன்னு டூ வீலர் வாங்கிக்கொடுத்தேன். அன்னைக்கிப் பார்த்து ஹெல்மெட் போடாம போய்... இப்படி...’’அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. என் மனைவி பேச்சை மாற்றி அவரின் குடும்ப விவரங்களைப் பற்றிக் கேட்டாள். அவரும் கூறினார். உரையாடலின்போது அடிக்கடி என் நெஞ்சின் இடப் பகுதியைப் பார்த்துப் பேசினார். உரையாடலின் முடிவில் கூறினார்.
‘‘எல்லாம் என் தலைவிதி சார். அன்னைக்கின்னு பார்த்து ஹெல்மெட் போட்டிருந்தான்னா...’’ என என் நெஞ்சின் இடப்பக்கத்தைப் பார்த்துப் பேசியவர் அதற்கு மேல் பேச முடியாமல் உடைந்த அணைக்கட்டுபோல அழத் தொடங்கினார். உடனே என் மனைவி என்னை உள்ளே போகச் சொல்லிவிட்டு அவரிடம் ஏதோ பேசித் தேற்றினாள். சில நிமிடங்கள் கழித்து என் அறைக்கு வந்தாள்.
‘‘ம்... அவரை அனுப்பிவிட்டேன். செக்கோட நீங்க எனக்குக் கல்யாண நாள் அன்னிக்கி வாங்கிக் குடுத்தீங்களே... அந்த செயின், அதையும் குடுத்துட்டேன்.’’ அப்போதுதான் அவள் கழுத்தைப் பார்த்தேன். அந்த செயின் அங்கில்லை.
இப்போதெல்லாம் நான் யாரிடமும் கோபப்படுவதில்லை. இப்போதெல்லாம் என் நண்பர்களின் பெயர்கள் சின் சான், சுசி மோரோ, டோரா என கார்ட்டூன் கதாபாத்திரங்கள்தான். இன்று காலையில் எழுந்து பேப்பர் எடுத்துப் படிக்கலானேன்.
‘ம்க்கும்... பேப்பர்ல எப்போ பார்த்தாலும் பிரச்சினைகள்தான். இருக்கிற காலம் ஒழுங்கா போகணும். நமக்கென்ன குழந்தையா குட்டியா’ என்று எண்ணியபோது குட்டிப்பூனை ஒன்று தன் முதுகை இப்படியும் அப்படியுமாக என் கணுக்காலில் தேய்த்தது. அதற்குக் கிண்ணத்தில் பால் வைத்தேன். என் மனைவி வந்தாள்.
‘‘இன்னையோட உங்களுக்கு ஆப
ரேஷன் பண்ணி ஒரு வருசம் ஆச்சு’’ என்றாள்.
‘‘ஓ... ஒரு வருசம் ஆச்சா? ஒரு நொடியில போயிருச்சு.’’
என் நெஞ்சில் கைவைத்துப் பார்த்துவிட்டுச் சொன்னேன்,
‘‘இந்த வாழ்க்கையில எதுவுமே என்னுடையதில்லை. என் இதயம் உட்பட.’’
‘‘ஏன்... நான் இருக்கேன்ல’’ உடனே மனைவி கூறினாள்.
நின்றிருந்த அவளின் முகத்தை அண்ணாந்து பார்த்தேன். மிக அருகில் வந்து என்னை உரசியபடி நின்றாள். மிருதுவாக என் தலைமுடியை வருடினாள். அப்படியே அவளின் நெஞ்சில் முகம் புதைத்தேன். இவள் எனக்காகப் பிறந்தவள். என் காதில் என் காதல் மனைவியின் இதயத் துடிப்பு கேட்டது. இவள்தானே என் சொந்தம். இப்படியே வாழ்க்கை ஓடிவிடும். ஒரு நொடியில் ஒரு வருடம் ஓடியதுபோல். இருக்கிறவரைக்கும் அன்பாக, அமைதியாக, ஆத்மார்த்தமாக இருப்போம். இதுபோதும் எனக்கு.

x