வாட்ஸ் அப் மூலம் மனு அளித்த மாற்றுத் திறனாளிக்கு ஒரே நாளில் பட்டா வழங்கி, வீடு கட்ட உத்தரவு: செங்கை ஆட்சியர் நடவடிக்கை


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வட்டத்துக்கு உட்பட்ட பாலூரை அடுத்த கரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவரது மகன் சத்தியமூர்த்தி (39), அதேபகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் இவருக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மனைவி இவரால் இனி ஏதும் பயனில்லை என முடிவு செய்து குழந்தைகளை அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். தாயின் அரவணைப்பில் சத்தியமூர்த்தி இருந்து வருகிறார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாதம் ரூ.3,000 உதவி தொகை இவருக்கு வழங்கப்படுகிறது. இதனை வைத்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் தனக்கு வீடு இல்லை, எனவே வீட்டுமனை பட்டா வழங்கி, வீடு கட்டி தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ் அப் மூலம் கடந்த 27-ம் தேதி கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.

வாட்ஸ் அப்பில் வந்த தகவலை கவனித்த ஆட்சியர் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா மற்றும் மாற்றுத் திறனாளிகள் துறையினர் விசாரணை மேற்கொண்டு ஆட்சியரிடம் அறிக்கை அளித்தனர்.

அதன்படி வாட்ஸ் அப் மூலம் கோரிக்கையை எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஒரே நாளில் தீர்வு காணும் வகையில் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி சத்தியமூர்த்திக்கு ஆட்சியர் ச.அருண்ராஜ் நேரில் சென்று அதே கிராமத்தில் வீட்டுமனை பட்டா வழங்கினார்.

மேலும், 2 மாதங்களில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் வீடு கட்டி தர வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும் அவருக்கு தேவையான மின்சாரத்தில் இயங்கும் அடுப்பு மற்றும் சமைப்பதற்கு தேவையான குக்கர் ஆகியவற்றையும் வழங்கினார். இந்நிகழ்வின்போது, செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயணசர்மா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

x