முதல்வரின் சாதனைகளைப் பிரச்சாரம் செய்ய அமைச்சர் உதயகுமார் திட்டமிட்ட சைக்கிள் பேரணி ஏற்பாடுகள் மதுரையை மலைக்க வைத்திருக்கிறது.
மதுரையில் மாதம் மும்மாரி பொழிகிறதோ இல்லையோ, முதல்வர் எடப்பாடி தன் திருமுகத்தைக் காட்டிவிடுகிறார். தனது நெருக்கடியான வேலைகளுக்கு நடுவில், அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டு காதுகுத்து விழாவில் பங்கேற்று, கறி விருந்தையும் சிறப்பித்துச் சென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதற்குப் போட்டியாக மதுரையில் முதல்வர் தலைமையில் 120 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்திவைத்து, 50 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்து படைத்தார் அமைச்சர் உதயகுமார்.
இப்படி ஒவ்வொரு முறை முதல்வர் வரும்போதும் அவரைச் சந்தோஷப்படுத்துவதற்காக மதுரை அமைச்சர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு எதையாவது செய்வது வழக்கம். காமராஜர் பிறந்த நாள் விழாவுக்காக 15-ம் தேதி விருதுநகருக்கு வந்தார் முதல்வர். அவரை வைத்தே மதுரை காளவாசலில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா, பரவை அருகே அதிமுக மாநகர் மாவட்டக் கட்சி அலுவலக அடிக்கல் நாட்டு விழாக்களை நடத்த ஏற்பாடு செய்தார் செல்லூர் ராஜூ. இதற்குப் போட்டியாக மூளையைக் கசக்கிய உதயகுமார் புதிதாக ஒரு நிகழ்ச்சியை உருவாக்கிவிட்டார். அதுதான், ‘பிரம்மாண்ட சைக்கிள் பேரணி’
“தமிழக வரலாற்றிலேயே இதுவரைக்கும் இல்லாத அளவுக்குக் குடிமராமத்துப் பணிகளை முதல்வர் சிறப்பாகச் செய்திருக்கிறார். காவிரி தண்ணீரைப் போராடிப் பெற்றுத் தந்திருக்கிறார். கூடவே, விவசாயிகளுக்குத் தேவையான பல திட்டங்களையும், சலுகைகளையும் சிறப்பாகச் செயல்படுத்தியிருக்கிறார். அவரே ஒரு விவசாயிதான் என்பதால், விவசாயிகள் பிரச்சினைகளை ஒரு விவசாயியாகவே சிந்தித்து, தீர்வை ஏற்படுத்தித் தருகிறார். இதை எல்லாம் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதி மக்களுக்கும் விளக்குவதற்காகவே ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த சைக்கிள் பேரணி” என்கிறார் அமைச்சர் உதயகுமார்.