சாதித்தார் சத்துணவு அமைப்பாளரின் மகன்!


இப்போதெல்லாம் சாமானியக் குடும்பத்துப் பிள்ளைகள்தான் அதிகம் சாதிக்கிறார்கள். அதற்கான இன்னொரு அடையாளம் இந்த அலெக்‌ஸ் பாண்டியன்! கடலூர் அருகே மா.பொடையூரைச் சேர்ந்த இவர், சத்துணவு அமைப்பாளர் தங்கராஜின் மகன். பன்னிரண்டாம் வகுப்பில் 1111 மதிப்பெண்ணும், நீட் தேர்வில் 306 மதிப்பெண்ணும் எடுத்து மருத்துவம் படிக்கப் போகிறார்.

இந்திரா தொகுப்பு வீடு திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட அந்தச் சிறிய வீட்டில் தனியாக அறையென்று எதுவும் இல்லை. சிறிய தடுப்புச்சுவர் ஒன்றின் அருகில் புத்தகங்கள் சிதறிக்கிடக்கின்றன. நவீனத்தின் அடையாளம் அறவே இல்லாத அந்த வீட்டில் டேபிள் மேட் ஒன்றுதான் ஆடம்பரப்பொருள். அதன் மீது, அலெக்‌ஸ்பாண்டியனின் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கான இடஒதுக்கீட்டு ஆணை இருந்தது.

அரசுப் பள்ளியில் படித்து இந்த நிலையைத் தொட்ட அலெக்ஸ்பாண்டியனுக்கு திருச்சி கி.ஆ.பெ.விசுவ நாதம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்திருக்கிறது. இதன்மூலம், இந்த ஆண்டு அரசுப்பள்ளியில் படித்து மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்த முதல் மாணவர், அரசின் நீட் பயிற்சி வகுப்பில் படித்து சாதித்த முதல்மாணவர், கடலூர் மாவட்டத்திலேயே நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர் - இப்படி ஏகப்பட்ட பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் அலெக்ஸ்!

அலெக்ஸ்பாண்டியனிடம், “எப்படி இதைச் சாதிக்க முடிந்தது?” என்று கேட்டேன். “அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் எங்களது மங்களூர் மாதிரிப்பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்புத்தான். எங்களைவிட, எங்களை மருத்துவராக்கிவிட வேண்டும் என்பதற்காக அவர்கள் மிகக்கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்கள்தான் அரசின் நுழைவுத்தேர்வு பயிற்சி முகாமுக்கு அனுப்பி னார்கள். அந்தப் பயிற்சி எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது” என்கிறார் அலெக்ஸ்பாண்டியன்.

x