சிலந்திகள் எப்படிப் பறக்கின்றன?- ஆய்வு சொல்லும் அதிசய தகவல்!


பறத்தல் என்றாலே சிறகுகள்தான் அடிப்படை. பறவைகள், பூச்சிகள், வௌவால்கள் (சிறகு போன்ற பகுதியைக் கொண்டவை) எல்லாம் சிறகுகளைக் கொண்டவை என்றால், மனிதர்கள் கற்பனைச் சிறகுகளைக் கட்டிக்கொண்டு பறப்பவர்கள். அந்தக் கற்பனைச் சிறகுகள்தான் இயந்திரச் சிறகுகளைக் கண்டுபிடிக்க உதவின. இவை தவிர மிகவும் வேறுபட்ட பறத்தலைக் கொண்டவை சிலந்திகள். சிலந்திகளுக்கு இறக்கைகள் கிடையாது, சவ்வுகள் கிடையாது. ஆனாலும் பறக்கின்றன. கொஞ்சநஞ்ச தூரம் இல்லை, ஆயிரம் மைல் தூரம் வரைகூட அவற்றால் பறக்க முடியும். இரண்டு மைல் உயரத்துக்கும் மேலே கூட அவற்றால் பறக்க முடியும். சிறகுகள் இல்லாமல் சிலந்திகள் இவ்வளவு தூரம், இவ்வளவு உயரம் எப்படிப் பறக்கின்றன என்பதுதான் வெகுநாட்களாகப் புதிராக இருந்தது.

பரிணாமவியலின் தந்தை சார்லஸ் டார்வின் தனது எச்.எம்.எஸ். பீகிள் கப்பலில் பயணம் மேற்கொண்டிருந்தபோது சிலந்திகள் அவரையும் மிரட்டியிருக்கின்றன. அக்டோபர் 31, 1832-ல் தனது கப்பலில் ஆயிரக்கணக்கான சிவப்புச் சிலந்திகள் ஊடுருவியிருப்பதை டார்வின் கண்டார். இத்தனைக்கும் அர்ஜென்டினாவின் கரையிலிருந்து 60 மைல் தூரத்தில் அவரது கப்பல் இருந்தது. கப்பலின் பாய்மரக் கயிறுகளிலெல்லாம் கணக்கற்ற சிலந்தி இழைகள் சிக்கியிருந்ததையும் அவரால் காண முடிந்திருக்கிறது. பரிணாமத்தின் புதிர்கள் பலவற்றையும் அவிழ்த்த டார்வினால் சிலந்திகள் இவ்வளவு தூரம் எப்படிப் பறந்துவந்தன என்ற புதிரை அவிழ்க்க முடியவில்லை. அந்தப் புதிரைத்தான் பிரிட்டனின் பிரிஸ்டல் பல்கலைக்கழக உயிரியல் பேராசிரியர்கள் எரிக்கா மார்லியும் டேனியல் ராபர்ட்டும் அவிழ்த்துள்ளனர்.

சிலந்திகளின் பறத்தலுக்கு இதற்கு முன்பு வரை காற்றைத்தான் காரணமாக உயிரியலாளர்கள் கூறினார்கள். ‘பலூன் பறத்தல் முறை’யில் சிலந்திகள் பறந்துசெல்கின்றன என்று நம்பப்பட்டது. இதன்படி, சிலந்திகள் உயரமான ஒரு பாறை நுனியிலோ மரம், செடி போன்றவற்றின் உச்சியிலோ சென்று நின்றுகொள்ளும். ஒற்றைக் காலைத் தூக்கிக் காற்றோட்டத்தைப் பரிசோதித்துப் பார்க்கும். பிறகு, வலை பின்னும் உறுப்பு இருக்கும் வயிற்றுப் பகுதியை வானத்தை நோக்கிவைத்து சிலந்தி இழைகளைப் பீய்ச்சும். ஆறு அடி உயரம் வரை இந்த சிலந்தி இழைகள் நீளும். காற்றில் உள்ள ஈரப்பதத்தில் சிலந்தி இழைகள் ஒட்டிக்கொள்ள, காற்றோட்டத்தில் சிலந்திகள் அடித்துச்செல்லப்படுகின்றன. சிலந்திகளின் பறத்தலுக்கு இதுதான் காரணம் என்று வெகு காலமாகக் கூறப்பட்டுவந்தது. ஆனால், காற்றோட்டத்தைவிட காற்றுவெளியில் உள்ள மின்புலத்தின் உதவியால்தான் சிலந்திகள் பறக்கின்றன என்று மார்லியும் ராபர்ட்டும் நிரூபித்துள்ளனர்.

பூமியின் தரைப்பரப்பு எதிர் மின்னூட்டமும் காற்றுவெளி நேர் மின்னூட்டமும் கொண்டிருக்கிறது. சிலந்தி என்ன செய்கிறது என்றால் பாறை உச்சியிலோ, செடியின் உச்சியிலோ போய் நின்றுகொண்டு வானை நோக்கிச் சிலந்தி இழைகளை ஏவுகிறது. அப்படி ஏவும்போது சிலந்தி இழைகளில் எதிர் மின்னூட்டம் உருவாகிறது. ஒரே மாதிரியான மின்னூட்டங்கள் ஒன்றையொன்று விலக்கும் என்பதையும் எதிரெதிர் மின்னூட்டங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் என்பதையும் நாம் அறிவோம். சிலந்தி நின்றுகொண்டிருக்கும் பரப்பிலுள்ள எதிர் மின்னூட்டம் சிலந்தி இழையின் எதிர் மின்னூட்டத்தை உந்தித் தள்ள, இதனால் காற்றுமண்டலத்தில் உள்ள நேர் மின்னூட்டம் சிலந்தி இழையை ஆரத் தழுவிக்கொள்கிறது. கூடவே, காற்றோட்டமும் உதவி செய்ய சிறகில்லாப் பறத்தல் ஆரம்பிக்கிறது.

x