என் அப்பாவும் அம்மாவும் கிராமத்தில் விவசாயம் செய்துவந்தனர். நான்எம்.பி.பி.எஸ். படித்து முடித்ததும் ராஜபாளையத்தில் கிளினிக் ஆரம்பித்து விட்டேன். அதனால், பெற்றோரையும் என்னுடன் அழைத்துக்கொண்டேன். அப்பா பகலில் கிளினிக் முன்வராந்தாவில் அமர்ந்துகொள்வார். அங்கு வருவோரிடம் ‘நம் பாரம்பரியப் பழக்கவழக்கங்கள்’ பற்றி நிறைய பேசுவார்.
உள்நோயாளிகளிடம் நோயின் தன்மையை அறிந்து ஆறுதல்படுத்துவார். அப்போதெல்லாம் அவருடைய பேச்சில் ஓர் ஆதங்கம் தெரியும். ‘நவீனம், நாகரிகம், வளர்ச்சி என்ற பெயரில் உணவிலும் உடையிலும் நம் அன்றாடங் களைத் தொலைத்துவிட்டு, காய்ச்சல், தலைவலியில் தொடங்கி, சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, புற்று வரை எல்லா நோய்களையும் கூட்டாளியாக்கிக்கொள்கிறார்களே!’ என வருத்தப்படுவார்.
“வயிறு கொள்ள வரகரிசிச் சோறு சாப்பிட்டப்போ வராத நோயெல்லாம், வெள்ளை அரிசிச் சோற்றை அளந்து சாப்பிட்டாலும் வரிசையில் வந்து நிக்குதே!” என்பார்.
“எங்க காலத்திலே தாகம் எடுத்தா கோலி சோடாதான் குடிப்போம். தாகம் தீரும். இப்போ பெப்ஸி, ஃபேண்டான்னு பாட்டில் பாட்டிலா குடிக்கிறாங்க. ஆனாலும் தாகம் தீரலே… தலைவலி வருதுன்னு ஆஸ்பத்திரிக்கு வர்றாங்க. இது தேவையா?” எனப் புலம்புவார்.