மதுரை ஆதீனத்தின் மத நல்லிணக்கப் புரட்சி!


அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கும் மதுரை ஆதீனம், நபிகள் நாயகத்தின் மிகுந்த வாழ்க்கையை மனமுருகிப் பாடி பாராட்டுகளையும் விமர்சனங்களையும் குவித்துக்கொண்டிருக்கிறார்!

எந்த மடாதிபதியும் செய்யத்துணியாத காரியத்தைச் செய்திருக்கிறார் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள். நபிகள் நாயகத்தின் மிகுந்த வாழ்க்கையை பாடலாகப் பாடி, அந்த வீடியோ காட்சியை இணையத்தில் பதிவேற்றியிருக்கிறார். காவியுடை, கழுத்தில் ருத்திராட்சை மாலை, நெற்றியில் விபூதி குங்குமத்துடன், நபிகளைப் பற்றி மனமுருக அவர் பாடுவதைப் பார்க்கப் பார்க்க ஆச்சரியம் மேலிடுகிறது.

“கற்பனையில் நினைத்தாலே கதி கலங்குது... இப்படியா நபி வாழ்க்கை இதயம் குலுங்குது...” என்று தொடங்கும் ஆதீனம் பாடிய அந்தப் பாடலை யு டியூபில் வெள்ளிக்கிழமை இரவு வரை இரண்டரை லட்சம் பேர் பார்த்திருந்தார்கள். சுமார் 40 ஆயிரம் பேர் முகநூலில் பகிர்ந்திருந்தார்கள். காயல் இளவரசு வரிகள் எழுத, ராஜா ஷா இசையமைக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை இஷ்ரத் காதிரி இந்த வீடீயோப் பாடலைத் தயாரித்திருக்கிறார்.

“சுத்த சைவ சித்தாந்தத்தை வலியுறுத்தும் ஆதீன கர்த்தர், ஓரிறைக் கோட்பாட்டை வலியுறுத்திய நபிகள் நாயகத்தைப் புகழ்ந்து பாடுவதைப் பார்க்கையில் வியப்பும், சிலிர்ப்பும் ஏற்படுகிறது” என்று பலரும் பாராட்டியிருக்கிறார்கள்.

x