டெல்லியில் நிகழ்ந்திருக்கும் 11 பேரின் மர்ம மரணம் பலரையும் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. தற்போது வரை கொலை முயற்சிக்கான தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை. கிடைத்திருக்கும் தடயங்களை வைத்துப் பார்க்கும்போது ஏதோ ஒரு சடங்கைப் பின்பற்றிக் குடும்பமே கூட்டாகத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற ஊகம் முன்வைக்கப்படுகிறது. மரணமடைந்தவர்களில் ஒருவரான லலித் பாட்டியாவின் நாட்குறிப்பேட்டில் உலகின் பேரழிவு நாள் நெருங்கிவிட்டதென்றும் அதிலிருந்து இந்தக் குடும்பத்தை மீட்க சில சடங்குகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் குறிப்பொன்று சிக்கியிருக்கிறது.
உலகம் 2000-ல் அழியப்போகிறது, 2012-ல் அழியப்போகிறது என்று பல்வேறு மதநம்பிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு எழுப்பப்படும் அபாயக் குரல்களை லலித் பாட்டியாவின் குறிப்பு நமக்கு நினைவுக்குக் கொண்டுவருகிறது. மதங்கள், சாமியார்கள் மட்டும்தான் உலக அழிவைக் குறித்த ஊகங்களை முன்வைப்பார்களா? இல்லை, அறிவியலும் உலக அழிவைப் பற்றிய கணிப்பை முன்வைத்துவருகிறது. ஊழிநாள் கடிகாரம் (Doomsday Clock) அப்படிப்பட்ட கணிப்புதான்.
அது என்ன ஊழிநாள் கடிகாரம்?
1945-ல், ஹிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளிருந்து இந்தக் கதை ஆரம்பிக்கிறது. அந்த அணுகுண்டுகளை உருவாக்கிய ‘மான்ஹாட்டன் திட்ட’த்தில் பணியாற்றிய அணு அறிவியலாளர்களின் சிந்தனையில் பிறந்ததுதான் ‘ஊழிநாள் கடிகாரம்’. ஒருவகையில் அவர்களின் மிகச் சிறிய பிராயச்சித்தம் என்றுகூட சொல்லலாம். அணு ஆயுதங்கள் உலகத்துக்கு எத்தனை அச்சுறுத்தலானவை என்பதை மற்றவர்களை விட மிகத் தெளிவாக உணர்ந்திருந்த அந்த அறிவியலாளர்கள் தங்களின் ‘புல்லட்டின் ஆஃப் அட்டாமிக் சயன்டிஸ்ட்ஸ்’ இதழில் 1947-ல், முன்வைத்ததுதான் ‘ஊழிநாள் கடிகாரம்’. அழிவை நோக்கி இன்னும் எவ்வளவு தூரத்தில் உலகம் இருக்கிறது என்பதை நேரத்தில் சுட்டிக்காட்டும் விதத்தில் இந்தக் கடிகாரத்தை உருவாக்கினார்கள். இது இயந்திர, டிஜிட்டல் கடிகாரம் அல்ல. ஒரு அடையாள எச்சரிக்கை அவ்வளவே. 1947-ல், அந்த இதழில் அட்டையில் இடம்பெற்றிருந்த கடிகாரம் இரவு மணி 11.53-ஐ காட்டியது. அதாவது நள்ளிரவுக்கு இன்னும் 7 நிமிடங்கள். நள்ளிரவு என்பது உலகப் பேரழிவைக் குறிப்பது.