‘தொற்றா நோய்கள்’ என்றதும் ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, நீரிழிவு, உடல் பருமன் என ஒருசில நோய்கள்தான் நம்மவர்களுக்கு நினைவுக்கு வருகின்றன. நாம் சாதாரணமாக நினைக்கும் தலைவலிகூட தற்போது தொற்றா நோய்க் கூட்டத்தில் சேர்ந்துவிட்டது என்றால் நம்புவீர்களா? உண்மை!
முன்பெல்லாம் தலைவலிக்குக் காரணமாக உடல் நோய்களைத்தான் பெரிதாகப் பேசுவார்கள். இப்போதோ இதற்கு உளவியல் பிரச்சினைகளையும் உணவியல் மாற்றங்களையும்தான் உரக்கப் பேசுகிறார்கள். இவற்றுக்கெல்லாம் அடிப்படை இந்தியப் பண்பாட்டைச் சிதைத்து, இங்கு அனுதினமும் அரங்கேறும் அந்நிய மண்ணின் வாழ்வியல் முறைகள்தான் காரணம், வேறென்ன?
தலைவலி வகைகள்
இத்தனைக்கும் தலைவலி என்பது ஒரு தனிப்பட்ட நோயில்லை. அது ஒரு நோய் அறிவிக்கும் அலாரம் மட்டுமே! தலைவலிக்கு இருக்கின்றன 300-க்கும் மேற்பட்ட காரணங்கள். எனவேதான் ‘தலைவலிக்குக் காரணம் தேடும் டாக்டருக்கே தலைவலி’ என்று வேடிக்கையாகச் சொல்வார்கள்.