மூன்றாண்டாகியும் முன்னேறாத மெட்ரோ!


சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு  மூன்றாண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், இன்னமும் இது எல்லோருக்குமான போக்குவரத்தாக மாறவில்லை.

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு இந்த ஜூனுடன் மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. காரணம், அதிகப்படியான கட்டணமும், மெட்ரோ நிலையங்கள் எளிதில் சென்றடையும் வகையில் இல்லாததும்தான். 2015 ஜூன் 29-ல், சென்னையில் மெட்ரோவின் முதல் வழித்தட சேவை தொடங்கப்பட்டபோது, “மெட்ரோ நிலையங்களைச் சுற்றி 500 மீ பரப்பில் உள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் சிறு பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் அல்லது வேறு வாடகை வாகனங்களை இயக்க வசதி செய்யப்படும்” என்றது மெட்ரோ நிர்வாகம்.

ஆனால், அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மினி பஸ்களும் பிரதான சாலைகளில் இயங்கு கின்றனவே தவிர, தெருக்களில் இறங்குவதில்லை. போதுமான எண்ணிக்கையில் இந்தப் பேருந்துகள் இல்லாததால், பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் நேரமும் அதிகரிக்கிறது. மேலும், மெட்ரோ நிலையங்களுக்குச் செல்வதற்காகப் பிற பயண வசதிகளைப் பயன்படுத்தினால், அதிகபட்சமாக 50 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. விரைவாகச் சென்றடைய வேண்டும் என்பதுதான் மெட்ரோ சேவையின் நோக்கம். ஆனால், மெட்ரோ நிலையங்களுக்குச் செல்வதற்கே நிறைய கால விரயம் ஆகிறது.

சரி, மெட்ரோ ரயில் கட்டணமாவது குறைவாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. மின்சார ரயிலில் பத்து ரூபாய்க்குச் சென்றடையும் தூரத்துக்கு மெட்ரோ ரயிலில் 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இப்போது பார்க்கிங் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. மெட்ரோ சேவையைப் பயன்படுத்தி ஒருவர் தன் வீட்டிலிருந்து அலுவலகம் சென்று வருவதற்கு குறைந்தபட்சம் 150 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. ஏழை நடுத்தர மக்களால் ஒருநாளைக்கு இவ்வளவு செலவு செய்து பயணிக்க முடியாது.

x