தைராய்டு தொல்லை இனி இல்லை


கவிதா எனும் கல்லூரி மாணவி என்னைச் சந்திக்க வந்தார். அவருடைய கழுத்தில் ‘சப்போட்டா’ சைஸில் ஒரு வீக்கம் இருந்தது. உணவையோ எச்சிலையோ விழுங்கும்போதெல்லாம் அது மேலே ஏறி இறங்கி அவரைப் பயமுறுத்தியது. சாதாரணமாக 25 கிராம் இருக்க வேண்டிய தைராய்டு அது. கவிதாவுக்கு 100 கிராம் அளவுக்கு வீங்கிக் கட்டியாகிவிட்டது.

 “கட்டி என்றாலே அது புற்றுநோயாகத்தான் இருக்கும்” என்ற தவறான கருத்து எப்படியோ மக்களிடம் பரவியிருக்கிறது. எனவே, எந்தக் கட்டியானாலும் பதறிக்கொண்டு மருத்துவரிடம் வருபவர்களே அதிகம். அதே மாதிரிதான் கவிதாவின் பெற்றோரும் வந்திருந்தனர். நான் அவரை முழுமையாகப் பரிசோதித்துவிட்டு, “பயப்பட வேண்டாம்! அது புற்றுக் கட்டி இல்லை! ‘காய்ட்டர்’ கட்டி!” என்றதும்தான் நிம்மதி ஆனார்கள்.

அது என்ன ‘காய்ட்டர்’ கட்டி?

தைராய்டு சுரப்பி, தைராக்ஸின் ஹார்மோனைச் சுரப்பதற்குத் தினசரி 100-லிருந்து150 மைக்ரோகிராம் வரை அயோடின் சத்து தேவை. நாம் சாப்பிடும் உணவிலிருந்து அயோடின் கிடைப்பது குறைந்துபோனால், தைராய்டு சுரப்பி சோம்பேறி ஆகிவிடும். அப்போது, அது தைராக்ஸினைச் சுரக்கச் சிரமப்படும். அதேநேரம், டிஎஸ்ஹெச் (TSH) அதிக அளவில் சுரந்து, தைராய்டு சுரப்பியைத் தூண்டும். ஆனாலும், அதனால் போதுமான அளவுக்குத் தைராக்ஸினைச் சுரக்க முடியாது. பதிலாக, தைராய்டு சுரப்பி வீங்கிவிடும். அதுதான் ‘காய்ட்டர்' (Goitre) கட்டி.

x